உள்ளூர் செய்திகள்

சாலை விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்

Published On 2024-10-20 09:23 IST   |   Update On 2024-10-20 09:23:00 IST
  • அரசின் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
  • அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் துறைவாரியாக செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பணி முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இதற்காக மாலை 6.40 மணியளவில் துணை முதல்-அமைச்சர் உ த ய நி தி ஸ்டாலின் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கு கலெக்டர் பிரசாந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இதையடுத்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தொடங்கியது. இதற்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் பிரசாந்த், சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளர் தாரேஷ் அகமது, எம்.பி.க்கள் மலையரசன், ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துறை வாரியாக அரசின் திட்டங்கள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்தார். அப்போது அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி செல்லும் வகையில் அதிகாரிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

வருவாய்த்துறையில் மனுக்களை நிராகரிக்காமல் அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

க ள் ள க் கு றி ச் சி யி ல் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மெதுவாக செல்லும் திட்டங்களை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் துரிதமாக முடிக்கப்பட்ட திட்டங்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தில் மாவட்டம் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் ஒரு சில துறைகளில் மட்டும் பணிகளில் தொய்வுகள் உள்ளன. இதை தீர்ப்பதற்கு என்னென்ன வசதிகள் செய்து தர வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.

மாவட்டம் உருவாக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆவதால் அமைச்சரும், கலெக்டரும் சில கோரிக்கைகள் வைத்துள்ளனர். அந்த கோரிக்கைகள் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜத்சதுர்வேதி, மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி பெருமாள், அரசு துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலத்திற்கு புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News