முல்லைப்பெரியாறு அணையின் புதிய கண்காணிப்புக்குழுவுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு: 25-ந்தேதி போராட்டம் நடத்த முடிவு
- அணையில் தண்ணீர் தேங்கும் பகுதி 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பகுதியாகும்.
- ஏக்கருக்கு ரூ.30 வீதம் வரி, மின்சார உற்பத்தி செய்தால் தமிழக அரசு சார்பில் வரி செலுத்தப்படுகிறது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணை புதிய கண்காணி ப்புக்குழுவில் கேரள பொறியாளர்கள் 2 பேர் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 25-ந் தேதி போராட்டம் நடத்த பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பழைய கண்காணிப்புக்குழு கலைக்கப்பட்டு புதிய கண்காணிப்புக்குழு தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனீஸ் ஜெயின் நியமிக்கப்பட்டார். இந்த ஆணையமே முல்லைப்பெரியாறு அணை தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கவனிக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய கண்காணிப்புக்குழுவில் இடம்பெற்றுள்ள கேரள நீர் பாசனத்துறை பொறியாளர்களை நீக்க வேண்டும் என பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு நீக்காவிட்டால் வருகிற 25-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:-
மத்திய அரசு முல்லைப்பெரியாறு அணையை கண்காணிக்க புதிய தலைவராக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் அனீஸ் ஜெயின், தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் மணிவாசகன், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோரும் கேரள நீர் பாசனத்துறையைச் சேர்ந்த 2 பொறியாளர்கள் இந்திய அறிவியல் கழகம் சார்பில் ஒருவர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அணையில் தண்ணீர் தேங்கும் பகுதி 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பகுதியாகும். மேலும் ஏக்கருக்கு ரூ.30 வீதம் வரி, மின்சார உற்பத்தி செய்தால் தமிழக அரசு சார்பில் வரி செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் எதன் அடிப்படையில் புதிய கண்காணிப்புக்குழுவில் கேரள பொறியாளர் இடம்பெற முடியும்? இதனை தமிழக விவசாயிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட இடத்தில் வரும் காலங்களில் எந்த ஒரு சிறிய வேலை செய்ய வேண்டும் என்றாலும் கேரள அதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்க வேண்டும். எனவே குழுவின் தலைவர் அனீஸ் ஜெயின், தமிழக நீர்வளத்துறை பொறியாளர்கள் மட்டும் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். இல்லையென்றால் வருகிற 25-ந் தேதி விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார்.