சேலம் ரெயில் நிலைய நடைபாதையில் குழந்தை பெற்ற பெண்
- சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்த போது லைலாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
- ரெயில் நிலையம் 5-வது நடைபாதையிலேயே லைலாவிற்கு பெண் குழந்தை பிறந்தது.
சேலம்:
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா-லைலா தம்பதியினர் கேரளாவில் தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் லைலா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததன் காரணமாக பிரசவத்திற்காக சொந்த ஊருக்கு நேற்று இரவு கணவருடன் கேரளாவில் இருந்து ரெயில் மூலம் புறப்பட்டு வேலூருக்கு வந்து கொண்டிருந்தார்.
ரெயில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்த போது லைலாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக லைலா ரெயிலில் இருந்து பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டார்.
பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் விரைந்து ரெயில் நிலையத்திற்கு வந்தது. ஆனால் அதற்குள் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் 5-வது நடைபாதையிலேயே லைலாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர் கண்ணன் மற்றும் டிரைவர் வடிவேல் ஆகியோர் தாய் லைலாவுக்கும், குழந்தைக்கும் முதலுதவி அளித்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.