பொங்கல் விளையாட்டு போட்டியில் உற்சாகமாக பங்கேற்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
- விழாவை முன்னிட்டு கிராம தேவதையான அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டது.
- பொங்கல் விளையாட்டு விழாவில் கிராமத்தை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், தமிழக சுற்றுலாத் துறை சார்பில் காஞ்சிபுரம் அடுத்த தேவரியம்பாக்கம் கிராமத்தில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதனை பார்க்க கனடா, ஜெர்மனி நாட்டை சேர்ந்த வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் தேவரியம்பாக்கம் கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி மலர்மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு, மேளதாளம் முழங்க, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு கிராம தேவதையான அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள கோவில் வளாகத்தில் பொங்கல் விழா விளையட்டு போட்டிகள் விமரிசையாக நடந்தது. நிகழ்ச்சிக்கு தேவரியம் பாக்கம் ஊராட்சித் தலைவர் அஜய்குமார் தலைமை தாங்கினார். மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மண்பானை செய்தல், வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், இளவட்டக்கல் தூக்குதல், சாக்குப்பை ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி கோலப் போட்டி (வீதி முழுதும்), ஜோசியம் மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளான பரதநாட்டியம், சிலம் பாட்டம், வில்லுப்பாட்டு பட்டிமன்றம் உள்ளிட்டவை நடைபெற்றன.
கிராம மக்களுடன் இணைந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உறி அடித்தல், மண்பானை செய்தல் உள்ளிட்ட போட்டிகளில் உற்சாகமாக கலந்து கொண்ட னர். வெளி நாட்டினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று கிராமத்தை பார்வையிட்டு மகிழ்ந்தனர். பொங்கல் விளையாட்டு விழாவில் கிராமத்தை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.