உள்ளூர் செய்திகள்

இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் அசத்திய இளைஞர்கள்-பெண்கள்

Published On 2025-01-17 14:41 IST   |   Update On 2025-01-17 14:41:00 IST
  • தென்மாவட்டங்களில் இளவட்டக் கல்லை தூக்கிச் சுமக்கும் வீர விளையாட்டு நடைபெற்று வருவது இயல்பு.
  • வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது பரிசுகள் மட்டுமே வழங்கப்படுகிறது.

பணகுடி:

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டிற்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இதற்கு அடுத்த கட்டமாக இளவட்டக்கல் தூக்கும் போட்டி பிரசித்தி பெற்றது.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடலிவிளை கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டு தோறும் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்று வருவது வியப்பை அளித்து வருகிறது.

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் இளவட்டக் கல்லை தூக்கிச் சுமக்கும் வீர விளையாட்டு நடைபெற்று வருவது இயல்பு. இளவட்டக் கல்லைத் தூக்கிச் சுமக்கும் இளைஞனுக்கு பெண்ணை மணமுடித்துக் கொடுத்தது அந்த காலத்தில் ஒரு வழக்கமாக இருந்தது. நாகரிக காலத்தில் அந்த வழக்கம் மறைந்து போனாலும் தென்மாவட்டங்களில் பல சிற்றூர்களில் இன்றளவும் இளவட்டக் கல்லைச் தூக்கும் போட்டி நடத்தப்படுகிறது.

தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது பரிசுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இளவட்டக்கல் பொதுவாகச் சுமார் 55, 60, 98, 114 மற்றும் 129 கிலோ எடை கொண்டதாகவும் முழு உருண்டையாக வழுக்கும் தன்மை கொண்டதாக எந்தப்பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத வடிவத்தில் இருக்கும். இளவட்டக் கல்லுக்குக் கல்யாணக்கல் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

இளவட்டக்கல்லைச் சுமப்பதில் பல படிநிலைகள் உண்டு. முதலில் குத்துக்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இருகைகளாலும் சேர்த்தணைத்து லேசாக எழுந்து கல்லை முழுங்காலுக்கு நகர்த்தி பின்னர் முழுதாக நிமிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லை நெஞ்சின் மீது ஏற்றி பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்தி முழுதாகச் சுமக்க வேண்டும். தோள்பட்டைக்கு இளவட்டக்கல் வந்துவிட்டால் பின்பக்கமாக தரையில் விழுமாறு செய்யவேண்டும்.


தமிழரின் உடல் பலத்திற்கும், வீரத்திற்கும் சாட்சியாகத் திகழ்ந்த இந்த இளவட்டக் கற்கள் இன்றைக்குப் பல ஊர்களில் தம்மைத் தூக்கிச் சுமப்பார் யாரும் இல்லாமல் பாதியளவு மண்ணில் புதைந்துகிடக்கும் பரிதாபத்தை காணமுடிகிறது . இருந்தபோதிலும் தற்போது நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் இளவட்டக்கல் தூக்கும் விளையாட்டு போட்டி வழக்கம்போல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் உரல் தூக்கும் போட்டியிலும் பங்குபெற இளைஞர்களுக்கு இணையாக இளம் பெண்களும் தங்களை தயார்படுத்தி விளையாடினர். இப்போட்டியில் உரலை ஒரு கையால் ஏந்தி தலைக்கு மேல் நீண்டநேரம் தூக்கி நிறுத்திவைக்கும் சாதனையும் நடைபெற்றது.

இதில் 55 கிலோ இளவட்ட கல்லை தூக்கும் போட்டியில் பெண்கள் பிரிவில் ராஜகுமாரி என்ற பெண்மணி 23 முறை கழுத்தை சுற்றி முதலிடத்தை பிடித்தார். 2-வது இடத்தை தங்க புஷ்பம் என்ற பெண் வெற்றி பெற்றுள்ளார்.


ஆண்களுக்கான 98 கிலோ இளவட்ட கல்லை கழுத்தை சுற்றி போடும் போட்டியில் முதல் பரிசை விக்னேஸ்வரனும் 2-வது பரிசை பாலகிருஷ்ணனும் தட்டி சென்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசும் பொன்னாடை அணிவித்து கவுர விக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வடலிவிளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News