உள்ளூர் செய்திகள்

கந்துவட்டி கொடுமையால் பட்டதாரி வாலிபர் தற்கொலை முயற்சி- 2 பேர் கைது

Published On 2025-01-17 15:04 IST   |   Update On 2025-01-17 15:04:00 IST
  • சிவபெருமாள் வாங்கிய பணத்தையும், அதற்கான வட்டித் தொகையையும் செலுத்த முடியாமல் திணறி வந்துள்ளார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே களக்காடு ரோட்டில் உள்ள பூதத்தான்குடியிருப்பை சேர்ந்தவர் சிவ பெருமாள் (வயது 24). பி.டெக். படித்துள்ளார்.

இவர் ஆன்லைனில் பணத்தை செலுத்தி வர்த்தகம் செய்து வந்துள்ளார். ஆன்லைன் வர்த்தகம் செய்யவும், புதிதாக தொழில் தொடங்கவும் ஆன்லைன் செயலி மூலம் 3 தவணையாக ரூ.5 லட்சம் கடனாக வாங்கி உள்ளார். ஆனால் அந்த செயலியில் 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கந்து வட்டி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் சிவபெருமாள் வாங்கிய பணத்தையும், அதற்கான வட்டித் தொகையையும் செலுத்த முடியாமல் திணறி வந்துள்ளார். அவரிடம் ஆன்லைனில் வட்டிக்கு பணம் கொடுத்த களக்காடு சிதம்பராபுரத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் சக்தி குமரன் (28) என்பவரும், திருக்குறுங்குடி அருகே உள்ள மாவடி ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (22) என்பவரும் பணத்தை திரும்பக்கேட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் சிவபெருமாளை நேரில் அழைத்து பணத்தை குறிப்பிட்ட தேதியில் செலுத்தக்கோரி ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து போடுமாறும், அல்லது அவரது மோட்டார் சைக்கிளை தங்களிடம் ஒப்படைத்து விடுமாறும் நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதனால் சிவபெருமாள் 2 பேரிடமும் மோட்டார் சைக்கிளை ஒப்படைத்து விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

விரக்தியில் இருந்த சிவபெருமாள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் சிவபெருமாளை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சேரன்மகாதேவி போலீசார் கந்து வட்டி கேட்டதாகவும், தற்கொலைக்கு தூண்டி யதாகவும் சக்திகுமரன், வெங்கடேஷ் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இளைஞர்கள் பலர் ஆன்லைன் டிரேடிங் அல்லது ஆன்லைன் விளையாட்டு உள்ளிட்டவற்றில் பணத்தை வைத்து விரைவில் அதிக பணத்தை சம்பாதிக்க முடியும் என நினைத்து பல லட்சங்களை கடனாக பெற்று அதை செலுத்த முடியாமல் திணறுவதை பார்க்க முடிகிறது. எவ்வளவு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும் இது போன்று பலரும் சிக்கிக் கொள்வதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News