உள்ளூர் செய்திகள்

பொதுக்கூட்டத்தில்அண்ணாமலை பேசிய போது எடுத்த படம்.

தமிழகம் கள்ளச்சாராய மாநிலமாக மாறிவிட்டது: அண்ணாமலை பேச்சு

Published On 2023-06-01 03:30 GMT   |   Update On 2023-06-01 03:30 GMT
  • ஊழல் நாடு என்ற பெயர் இந்தியாவிற்கு இருந்தது.
  • எந்தவித ஊழலும் இல்லாத ஆட்சியை பா.ஜனதா கொடுத்துள்ளது.

மதுரை :

மதுரை அண்ணாநகரில், மத்திய பா.ஜனதா அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

இந்திய சரித்திரத்தில் மிக முக்கியமான 9 ஆண்டாக, பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம் இருந்துள்ளது. கடைகோடியில் இருக்கிற சாமானிய மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கும் என்பதை யோசித்து பார்த்து வீடு, கியாஸ் சிலிண்டர், வங்கி கணக்கு, அந்த வங்கி கணக்கிற்கு பணம், ரேஷன் அட்டை என பல சலுகைகள் மோடி ஆட்சியில் கிடைத்துள்ளன.

ஊழல் நாடு என்ற பெயர் இந்தியாவிற்கு இருந்தது. அதனை உடைத்து காட்டியவர், மோடி. 9 ஆண்டுகள் கடந்தும் கூட பிரதமர் மோடியின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் வைக்கமுடியவில்லை. அந்த அளவிற்கு சிறப்பான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதனை வீடு, வீடாக எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை, பல பெருமைகளை கொண்டது. தமிழை வளர்க்க மோடி பாடுபடுகிறார். தமிழின் பெருமை, தமிழனின் பெருமையை உலகெல்லாம் எடுத்துச் சென்றுவிட்டார். ஐ.நா. சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என பேசி, திருக்குறளின் பெருமையை பட்டிதொட்டி எல்லாம் எடுத்துரைத்தார். வாரணாசியில், காசி தமிழ் சங்கம் வளர்த்தார். செங்கோலின் பெருமையை பாராளுமன்றத்தில் நிலை நாட்டினார்.

புதிய பாராளுமன்றத்தில் பேசப்பட்ட முதல் மொழி தமிழ் மொழிதான். பாராளுமன்றத்திற்கு எப்போது செங்கோல் சென்றதோ, இனி தமிழகத்திலும் அறம் சார்ந்த ஆட்சிதான் அமையப்போகிறது.

தற்போது இருக்கும் தி.மு.க. ஆட்சிக்கும், அறம் என்ற வார்த்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாராளுமன்றத்தில் செங்கோல் மட்டும் நிறுவப்படவில்லை. தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்காக அஸ்திவாரம் நிறுவப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானில் இருந்து, பிரதமரை பற்றி குறை கூறி வருகிறார். எந்தவித ஊழலும் இல்லாத ஆட்சியை பா.ஜனதா கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியை போல ஊழலில் ஈடுபடவில்லை. ஆனால், 2 ஆண்டுகளே ஆட்சி நடத்திய தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ளது

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை குடித்து 22 குடும்பங்கள் துயரத்தில் இருக்கின்றன. ஆனால், வெளிநாட்டில் முதல்-அமைச்சர் சொகுசாக இருக்கிறார். தமிழகம் கள்ளச்சாராய மாநிலமாக மாறிவிட்டது. இதற்கு தி.மு.க.தான் காரணம். ரூ.44 ஆயிரம் கோடி டாஸ்மாக் வழியாக வருவாய் ஈட்டும் மாநிலமாக தமிழகத்தை தி.மு.க. மாற்றி இருக்கிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. அரசு மீது கோபத்தில் இருக்கின்றனர். இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணாமலை பேசி கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்தது. அதனையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் அவர் பேசினார். இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, பா.ஜனதா மண்டல் தலைவர்கள் 1200 பேருக்கு, அண்ணாமலை வெள்ளி மோதிரம் வழங்கினார்.

Tags:    

Similar News