போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரிய அலுவலகம் முற்றுகை
- அரசு அலுவலகம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
- இந்த நிலையில் இன்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அந்த அலுவலகம் முன்பு திரண்டனர். அதிகாரிகளை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் 4 ரோடு அருகே பெரமனூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அரசு அலுவலகம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. மேலும் மத்திய, மாநில அரசுகள் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மானியத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வீடுகள் கட்டி தரப்படும் என ஆணைகள் வழங்கப்பட்டன. இதற்காக ஏற்கனவே இருந்த வீடுகளையும் இடித்து பயனாளிகள் தயாராகினர். ஆனால் 6 மாதமாகியும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் அளிக்கவில்லை.
குறிப்பாக அந்த அலுவலக நிர்வாக பொறியாளர், அரசியல் பிரமுகர்களுக்கு மட்டும் வீடுகள் கட்டிக் கொடுப்பதாகவும், மற்றவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க மறுப்பதாகவும் புகார்கள் எழுந்தது.
இந்த நிலையில் இன்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அந்த அலுவலகம் முன்பு திரண்டனர். அதிகாரிகளை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்த வீட்டை இடித்து விட்டோம். புதிய வீடும் கிடைக்காததால் வாடகை வீடுகளில் வசித்து வருவதாகவும், உடனே வீடுகள் கட்டித் தர வேண்டும் என்றும் கூறி அதிகாரிகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். வீடுகளை கட்டி தராவிட்டால் அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் கூறினார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்தும், அதிகாரிகள் யாரும் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.