உள்ளூர் செய்திகள்

குழந்தையை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த பெண்.

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் 1 மாத பச்சிளம் குழந்தைக்கு மதுவை கொடுத்து சித்ரவதை

Published On 2022-09-16 13:28 IST   |   Update On 2022-09-16 15:43:00 IST
  • போதையில் திரிந்த பெண் அது தனது குழந்தை என்று சொல்லிக்கொண்டே நடக்கமுடியாமல் தள்ளாடி கீழே விழுந்தார்.
  • 50 வயது மதிக்கத்தக்க பெண் உண்மையிலேயே அந்த குழந்தையின் தாயா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிற்கும் இடத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிறந்து 1 மாதமே ஆன ஆண்குழந்தையை கையில் வைத்து அந்த குழந்தைக்கு வாயில் மதுஊற்றி கொடுத்துக்கொண்டே இருந்தார்.

மேலும் தானும் மதுபானம் குடித்துகொண்டு அந்த குழந்தையை அடித்து கொண்டே இருந்தார். இதைபார்த்த அப்பகுதி வியாபாரிகள் நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது அந்த குழந்தை பிறந்து 15 நாள்தான் ஆவதாகவும், தான் கரூரில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் இருந்த குழந்தையை வாங்கி பார்த்தபோது அது மயக்கத்தில் இருந்தது. மேலும் அந்த போதை பெண்ணின் மடியில் மேலும் சில மதுபாட்டில்களை வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடமிருந்து குழந்தையை மீட்ட போலீசார் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். 2 கிலோ 600 கிராம் எடை கொண்ட அந்த ஆண்குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குள்தான் இருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

போதையில் திரிந்த பெண் அது தனது குழந்தை என்று சொல்லிக்கொண்டே நடக்கமுடியாமல் தள்ளாடி கீழே விழுந்தார். ஆனால் 50 வயது மதிக்கத்தக்க அவர் உண்மையிலேயே அந்த குழந்தையின் தாயா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது.

அவர் வைத்திருந்த பையில் வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த குழந்தை கடத்தி வரப்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

அந்த கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போதையில் இருந்த பெண்ணை மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பஸ்நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தக்க சமயத்தில் குழந்தை மீட்கப்பட்டதால் தற்போது சிகிச்சையில் உள்ளது.

Tags:    

Similar News