ஒற்றை தலைமை விவகாரம்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் இடையே சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வி
- அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைமை விவகாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 6-வது நாளாக நீடித்தது.
- இன்றும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தங்களது வீடுகளில் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தினார்கள்.
சென்னை:
அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பதவி சண்டை உச்சக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
அ.தி.மு.க.வில் தற்போது உள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை முறையை மாற்றிவிட்டு பொதுச்செயலாளர் என்னும் ஒற்றைத் தலைமையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் எண்ணமாக உள்ளது.
ஒருங்கிணைப்பாளர் பதவியை விட்டுக்கொடுத்தால் அ.தி.மு.க.வில் தனக்குள்ள முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று ஓ.பன்னீர்செல்வம் கருதுகிறார். எனவே அவர் ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்று ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
என்றாலும், எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் ஒற்றை தலைமையை எப்படியும் கொண்டுவந்துவிட வேண்டும் என்று தீவிரமாக உள்ளனர். இதற்காக கடந்த 5 நாட்களாக ஓ.பன்னீர்செல்வத்துடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் எந்த சமரசத்தையும் ஏற்காமல் தொடர்ந்து தனது முடிவில் உறுதியாக உள்ளார்.
இதையடுத்து சிக்கலுக்கு தீர்வு காண எடப்பாடி பழனிசாமி புதிய திட்டம் ஒன்றை மேற்கொண்டார். அதன்படி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் தொடரலாம். அவைத் தலைவர் பதவியை நீக்கி விட்டு அ.தி.மு.க.வில் புதிய தலைவர் பதவியை உருவாக்கலாம். அந்த தலைவர் பதவியை தான் எடுத்துக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அவரது இந்த புதிய திட்டத்தை கடந்த 2 நாட்களாக தம்பித்துரை, செல்லூர் ராஜூ உள்பட சில மூத்த தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தெரிவித்தனர். பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக தலைவர் பதவியை உருவாக்கி அதை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துவிடலாம் என்று தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு தலைவர் பதவி கொடுத்தால் அ.தி.மு.க. சார்பில் வெளியிடப்படும் கருத்துகள், அறிக்கைகள் அனைத்தும் அவரது பெயரில் தான் வெளியாகும். இதை அறிந்ததும், ஓ.பன்னீர்செல்வம் மிகவும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தார். தொடக்கத்திலேயே அவர் இந்த புதிய திட்டத்தை ஏற்க மறுத்து எதிர்ப்பு தெரிவித்தார்.
அ.தி.மு.க. உருவாக்கப்பட்டதும், எம்.ஜி.ஆர். தலைவர் பதவி அண்ணாவுக்கு உரியது என்று கூறி நிரந்தரமாக அதற்கான விதியை ஏற்படுத்தி உள்ளார். அந்த தலைவர் பதவியை அப்படியே அண்ணாவுக்காக விட்டுவிட வேண்டும். அதை வேறு யாருக்காகவும் விதிகளை மாற்றி கொடுக்கக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறினார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த முடிவால் எடப்பாடி பழனிசாமிக்கு தனது ஒற்றை தலைமை திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. சுமூக தீர்வு எட்டப்படாததால், வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஒற்றை தலைமை பற்றி தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றலாம் என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் முயற்சி செய்தனர்.
இதை அறிந்த ஓ.பன்னீர்செல்வம் அடுத்தடுத்து தலைமை கழகத்துக்கு வந்து தீர்மானக் குழு கூட்டத்தில் பங்கேற்று இந்த முயற்சிகளை முறியடித்தார். இதனால் ஒற்றைத் தலைமை பற்றி அ.தி.மு.க. பொதுக்குழுவில் வைக்கப்பட உள்ள தீர்மான பட்டியலில் எதுவும் சேர்க்கப்படவில்லை.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தனியாக ஒரு சிறப்பு தீர்மானம் கொண்டுவந்து இரட்டை தலைமையை நீக்கிவிட்டு ஒற்றைத் தலைமையை உருவாக்க எடப்பாடி பழனிசாமி அணியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கும் ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். தான் கையெழுத்து போடாமல் எந்த தீர்மானமும் கொண்டுவர முடியாது என்று அறிவித்தார்.
ஆனால் தீர்மானம் கொண்டுவர ஓ.பன்னீர் செல்வத்தின் ஒப்புதலோ, கையெழுத்தோ தேவையில்லை என்று எடப்பாடி பழனிசாமி அணியினர் கூறுகிறார்கள். சட்ட விதிகளை மேற்கோள்காட்டி அவர்கள் தனி தீர்மானத்தை கொண்டுவர திட்டம் தீட்டியுள்ளனர். இதனால் 23-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழுவில் பரபரப்பான சூழ்நிலை உருவாகும் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி அணியினர் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தீவிரமாக உள்ளனர். எடப்பாடி பழனிசாமி அணியின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் முட்டுக்கட்டை போடுவதற்கு அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
அதன்படி ஒற்றைத் தலைமை தொடர்பாக தனி தீர்மானம் கொண்டு வருவதை முறியடிக்க சட்ட ரீதியிலான நடவடிக்கையை கையிலெடுக்க ஓ.பன்னீர் செல்வம் அணியினர் தீவிரமாக உள்ளனர். ஆனால் அதற்கு வெற்றி கிடைக்குமா என்பது தெரியவில்லை. என்றாலும், ஓ.பி.எஸ். அணியினர் அனைத்து வகையிலும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே பதவி தொடர்பாக எழுந்துள்ள சண்டையை முடிவுக்கு கொண்டுவர மூத்த தலைவர்கள் அனைவரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் நேற்று முதல் சமரச முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிறகு எடப்பாடி பழனிசாமியை அவர் சந்தித்து பேசினார். ஆனால் இருவரும் தங்களது முடிவில் பிடிவாதமாக உள்ளதால் செங்கோட்டையனால் சமரசம் செய்ய முடியவில்லை.
இதனால் நேற்று இரவு மீண்டும் சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதனால் நடுநிலை வகிக்கும் மூத்த தலைவர்கள் அடுத்து என்ன செய்வது? என்று ஆலோசித்து வருகிறார்கள்.
அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைமை விவகாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 6-வது நாளாக நீடித்தது. இன்றும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தங்களது வீடுகளில் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தினார்கள். இன்று அ.தி.மு.க. தலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டங்கள் அதிகளவில் நடந்தன.
ஆனால் எந்த ஆலோசனை கூட்டத்திலும் சுமூக தீர்வு வரவில்லை. இதனால் புதிய சமரச திட்டத்தை கையில் எடுக்கலாமா? என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் பேசி வருகிறார்கள். மற்றொரு பக்கத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும், தங்களது செல்வாக்கை நிலைநிறுத்த ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்களது வீட்டில் இருந்தபடியே ஆலோசனை நடத்தி வந்த நிலையில் இன்று காலை செங்கோட்டையனும், தம்பிதுரையும் மீண்டும் சமரச முயற்சிகளில் ஈடுபட்டனர். அவர்கள் இருவரும் முதலில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விட்டு பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் தனது முடிவை தெரிவித்த பிறகு செங்கோட்டையனும், தம்பிதுரையும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வந்தனர். ஓ.பன்னீர்செல்வம் எத்தகைய முடிவுடன் இருக்கிறார் என்பதை அவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் தெளிவுப்படுத்தினார்கள்.
இன்று மதியம் வரை எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே எந்த சமரசமும் ஏற்படவில்லை. அனைத்து சமரச முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளது. எனவே அடுத்து என்ன நடக்கும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் பரபரப்பான எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் திண்டுக்கல் சீனிவாசன், நந்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, பொன்னையன், கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, வீரமணி, வளர்மதி, ஜெயக்குமார், தளவாய் சுந்தரம், ராஜன் செல்லப்பா உள்பட ஏராளமானோர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மைத்ரேயன், எம்.சி.சம்பத், உள்பட விரல் விட்டு எண்ணும் சில தலைவர்களே உள்ளனர்.
அ.தி.மு.க.வில் நிர்வாக அமைப்புக்காக 75 மாவட்ட செயலாளர் பதவிகள் உள்ளன. இந்த பதவிகளில் உள்ள 75 பேரில் 11 பேர் மட்டுமே ஓ.பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர். மீதமுள்ள 64 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர்.
அதுபோல அ.தி.மு.க. செயற்குழு பொதுக்குழுவில் உள்ள சுமார் 3 ஆயிரம் உறுப்பினர்களில் சுமார் 300 பேர் மட்டுமே ஓ.பி.எஸ். அணியில் உள்ளனர். மீதமுள்ளவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஆவார்கள்.
இதன் அடிப்படையில் கணக்கிட்டால் கட்சியின் அனைத்து பிரிவுகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு சுமார் 90 சதவீதம் பேர் ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 10 சதவீதம் பேர் மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை விட எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருப்பதாக சொல்கிறார்கள்.