ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையில் திடீர் பள்ளம்
- ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டது.
- மழைநீர் தேக்கத்தால் மண் சரிந்து உள்வாங்கி இருக்கலாம் என்றனர்.
சென்னை:
சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலை பிரபலமானது. அந்த பகுதியில் வி.ஐ.பி.க்கள் வசிக்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்து இந்த சாலை வழியாகத்தான் தலைமைச் செயலகத்துக்கு சென்று வருவார்.
இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் டி.டி.கே.சாலை தபால் நிலையம் அருகில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. 4 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு உண்டானது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு விரைந்த போலீசார் உடனடியாக பள்ளம் விழுந்த பகுதியை சுற்றி தடுப்பு வேலி அமைத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். அந்த வழியில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் வந்து சாலையில் திடீர் பள்ளம் ஏற்படுவதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். தற்போது ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டதா? அருகில் எதுவும் குழி உள்ளதா? என பார்வையிட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, பரபரப்பான இந்த சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு உள்ளது. மெல்ல மெல்ல சாலை மண்ணுக்குள் செல்வதை அறிந்து தகவல தெரிவித்தோம். உடனடியாக பள்ளத்தை பார்த்ததால் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. மழைநீர் தேக்கத்தால் மண் சரிந்து உள்வாங்கி இருக்கலாம் என்றனர்.