பாணாவரம் இலங்கை தமிழர் முகாமில் காதல் திருமணம் செய்த மாப்பிள்ளைக்கு சரமாரி வெட்டு
- பாணாவரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பை சேர்ந்தவர் ஆரோக்கியம்.
- மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் இலங்கை தமிழர் மறுவாழ்வு குடியிருப்பை சேர்ந்தவர் ஆரோக்கியம் என்பவரது மகன் கிளின்டன் (வயது 21).3 மாதங்களுக்கு முன்பு அதே குடியிருப்பில் வசிக்கும் சுஜிதா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். தொடர்ந்து தம்பதியினர் சென்னையில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கிளின்டன் அவரது மனைவியுடன் பாணாவரம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு வந்தார்.நேற்று காலை கிளின்டன் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது அருகே பதுங்கியிருந்த மர்ம நபர்கள் கிளின்டனை கத்தியால் வெட்டி சாய்த்தனர்.
இதில் அவரது கன்னம், கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டு விழுந்தது.மேலும் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாணாவரம் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கிளின்டனை மீட்டு பாணாவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிளின்டனை வெட்டியவர்கள் யார்? எதற்காக வெட்டினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.