ராஜபாளையம் அருகே விபத்து: திருப்பூர் தொழிலதிபர் உள்பட 6 பேர் படுகாயம்
- காரை ஓட்டி வந்த மணிகண்டன், அவரது மனைவி, குழந்தைகள், தனம், பிச்சையம்மாள் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
- விபத்து குறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
கோவை மாவட்டம் திருப்பூரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது37). பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி திவ்யா பாரதி (32). இவர்களுக்கு விஸ்வாஸ்(8), மேகா ஸ்ரீ(6) ஆகிய குழந்தைகள் உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் தங்கள் உறவினர்கள் தனம்(60), பிச்சையம்மாள்(80), அருண் குமார்(45) ஆகியோருடன் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் புறப்பட்டனர். நேற்று குற்றாலம் சென்றுள்ளனர்.
இன்று அதிகாலை குற்றாலத்தில் இருந்து குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டனர். மணிகண்டன் காரை ஓட்டினார். தென்காசி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரை ஓட்டி வந்த மணிகண்டன், அவரது மனைவி, குழந்தைகள், தனம், பிச்சையம்மாள் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் காரில் இருந்தவர்களை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கருத்தபாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த தனம், பிச்சையம்மாள் ஆகியோர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கணவன்-மனைவி, குழந்தைகளுக்கு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த விபத்து குறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.