உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் 2-வது நாளாக அடுத்தடுத்து 4 கடைகளில் மேற்கூரையை உடைத்து கொள்ளை

Published On 2024-02-16 11:49 IST   |   Update On 2024-02-16 11:49:00 IST
  • மர்ம நபரின் உருவம் நேற்று முன்தினம் அடுத்தடுத்து தருமபுரி பகுதியில் 7 கடைகளில் கொள்ளையடித்த மர்ம நபர் தான் தெரியவந்தது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி:

தருமபுரி பகுதியில் நேற்று 2-வது நாளாக மர்ம நபர் ஒருவர் அடுத்தடுத்து 4 கடைகளின் மேற்கூரையை உடைத்து ரூ.3.14 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சி.சி.டி.வி. கேமராவில் பதிவான மர்ம நபரின் உருவத்தை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரியில் உள்ள எஸ்.வி.சாலையில் காந்தி நகர் 2-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் (வயது40). இவர் அன்னசாகரம் கூட்ரோடு பகுதியில் பாத்திர கடை ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு அவர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை அவர் கடையை திறந்து பார்த்தபோது கடையின் மேற்கூரையின் சிமெண்டு அட்டை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது பணப்பெட்டியில் இருந்த ரூ.3 லட்சத்தை காணவில்லை. மேலும், அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

இதேபோன்று கேசவனின் கடையின் பக்கத்தில் உள்ள அதே பகுதியைச் சேர்ந்த நல்லசாமி (40) என்பவரது பத்திர கடையின் மேற்கூரையும் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே அவருக்கும் கேசவன் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த நல்லசாமி கடையயை திறந்து பார்த்தபோது கடையில் வைத்திருந்த உண்டியல் பணத்தை ரூ.7 ஆயிரத்தை மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது. இதேபோன்று அதே பகுதியில் உள்ள பா.ஜ.க. நிர்வாகி கணேசனின் மெடிக்கல் கடையில் ரூ.2 ஆயிரத்தையும், அதனருகில் உள்ள இளையராஜா என்பவரது ஆட்டோ மொபைல் கடையில் ரூ.5 ஆயிரத்தையும் மர்ம திருடி சென்றுள்ளார்.

இதுகுறித்து கேசவன் தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்ததில், இந்த 4 கடைகளிலும் மர்ம நபர் ஒருவர் மேற்கூரையை உடைத்து உள்ளேபுகுந்து ரூ.3.14 லட்சம் திருடி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

மேலும், அந்த பகுதியில் சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், அதில் பதிவான மர்ம நபரின் உருவம் நேற்று முன்தினம் அடுத்தடுத்து தருமபுரி பகுதியில் 7 கடைகளில் கொள்ளையடித்த மர்ம நபர் தான் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரியில் உள்ள சோகத்தூர் கூட்ரோடு, குண்டல்பட்டி ஆகிய பகுதிகளில் மொத்தம் 7 கடைகளில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் கதவை உடைத்து பணம் கொள்ளயைடித்த சம்பவம் அரங்கேறி முழுவிசாரணை முடிவதற்குள் நேற்று இரவு மீண்டும் அதே மர்ம நபர் எஸ்.வி. சாலையில் உள்ள 4 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். மர்ம நபரின் இந்த துணிகர செயலால் தருமபுரி நகர் பகுதியில் வியாபாரிகள், வணிகர்கள் பெரும் தங்களது கடைகளில் கொள்ளை சம்பவம் நடந்து விடுமோ என்ற அச்சத்திலும், பீதியிலும் உறைந்து போயுள்ளனர்.

இந்த சம்பவம் அந்த எஸ்.வி. சாலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News