விருதுநகர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி-மாணவர் பலி
- விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உள்ள ஊரணி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
- வேகத்தில் ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள தவசிலிங்காபுரத்தை சேர்ந்தவர் வைரமுத்து (வயது24). இவர் சிவகாசியில் உள்ள அச்சகத்தில் பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சங்கிலிவீரன். இவரது மகன் ஸ்ரீராம் (15). இவர் முத்துகுமாரபுரத்தில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று குமாரலிங்கபுரத்தில் உள்ள முனியாண்டி கோவிலில் திருவிழா நடந்தது.
இதில் பங்கேற்பதற்காக வைரமுத்து மோட்டார் சைக்கிளில் ஸ்ரீராமை அழைத்து சென்றார். அங்கு திருவிழா முடிந்து 2 பேரும் நேற்று இரவு 10 மணிக்கு ஊருக்கு புறப்பட்டனர். விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உள்ள ஊரணி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
அதே வேகத்தில் ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வைரமுத்து, ஸ்ரீராம் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து குறித்து சங்கிலிவீரன் கொடுத்த புகாரின்பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை அன்புநகரை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மாரியம்மாள்(36). நேற்று கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டனர்.
விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் சென்றபோது ராஜா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த மாரியம்மாள் தவறி நடுரோட்டில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது.
இதில் உடல் நசுங்கி மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சொக்கலிங்காபுரத்தை சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் நாகலட்சுமி(38) படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.