ஜெயலலிதா மரண உண்மை தன்மையை மக்களுக்கும் விளக்க வேண்டும்- முத்தரசன்
- கடலூரில் நேற்று சிறைத்துறை துணை ஜெயிலர் வீடு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை உரிய விசாரணை செய்து யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கன்னியாகுமரியில் வரும் ஏழாம் தேதி ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் பாதயாத்திரை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
புதுக்கோட்டை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் புதுக்கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க சட்டத்தை உருவாக்குவதற்கு முடிவு எடுக்க வேண்டும். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்து மர்மம் இருப்பதாக அ.தி.மு.க.வினர் தான் கூறினர். அவர்கள் தான் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தனர்.
தற்போது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. இந்த அறிக்கை தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் உரிய முடிவு எடுத்து உண்மை தன்மையை அ.தி.மு.க. தலைவர்களுக்கு மட்டுமல்ல, அதனை மக்களுக்கும் அரசு விளக்க வேண்டும்.
கடலூரில் நேற்று சிறைத்துறை துணை ஜெயிலர் வீடு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை உரிய விசாரணை செய்து யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரியில் வரும் ஏழாம் தேதி ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் பாதயாத்திரை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
சாதாரண ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாநில அரசுகள் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதனை இலவசம் என்ற பெயரில் கொச்சைப்படுத்துவது தவறு. அந்த பொருட்களை கூட கொடுக்க முடியாத அளவுக்கு செல்ல காரணம் இந்த கையாலாக மோடி அரசுதான். உதவிகள் செய்வதை அலட்சியப்படுத்தும் வகையில் கூறுவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.