கோவில், மார்க்கெட் பகுதியில் கைவரிசை- செல்போன் திருடிய வடமாநில சிறுவன் கைது
- சிறுவன் தனது கூட்டாளிகள் 4பேருடன் சேர்ந்து பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் கோவில், மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கைவரிசை காட்டி நூதன முறையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
- சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
போரூர்:
சென்னை வடபழனி முருகன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக 2 வாலிபர்கள் சுற்றி திரிவதாக வடபழனி போலீசுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து சென்று இருவரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த கைப்பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் ஏராளமான செல்போன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை செய்து கொண்டு இருந்த போது திடீரென ஒருவன் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டான். பிடிபட்ட வாலிபர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் என்பது தெரிந்தது.
சிறுவன் தனது கூட்டாளிகள் 4பேருடன் சேர்ந்து பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் கோவில், மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கைவரிசை காட்டி நூதன முறையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய வாலிபர் உள்பட கூட்டாளிகள் 4 பேரை போலீசார் தேடி வரு கின்றனர்.