வேளச்சேரியில் திறக்கப்பட உள்ள புதிய டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்
- வேளச்சேரி புவனேஸ்வரி நகரில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வேளச்சேரி ரெயில் நிலையம் அருகில் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தின் அருகில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:
வேளச்சேரி ரெயில் நிலையம் அருகில் உள்ள மகேஸ்வரி நகர், புவனேஸ்வரி நகர், சுப்பிரமணி காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன.
இந்த நிலையில் வேளச்சேரி புவனேஸ்வரி நகரில் புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வேளச்சேரி ரெயில் நிலையம் அருகில் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தின் அருகில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் நல சங்கத்தினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள் புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறும்போது, "புதிதாக திறப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வரும் டாஸ்மாக் கடைக்கு எதிராக மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டும் பொதுமக்கள் வசிக்கும் இந்த பகுதியில் கடையை திறக்கக் கூடாது என்று கூறியுள்ளது.
இதையெல்லாம் மீறி டாஸ்டாக் கடையை திறக்க சிலர் முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது என்றனர்.
பள்ளி-கல்லூரிகளுக்கு செல்பவர்கள், வேளச்சேரி ரெயில் நிலையத்துக்கு தினமும் செல்லும் பெண்கள் உள்ளிட்டவர்களும், டாஸ்மாக் கடைய திறந்தால் பாதிக்கப்படுபவார்கள் என்றும் எனவே தமிழக அரசு டாஸ்மாக் கடைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.