உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு போலீஸ்காரர் தற்கொலை
- போலீஸ்காரர் அன்புராஜ் தற்கொலை செய்த விஷயத்தை அறிந்த அவருடன் பணியாற்றிய சக போலீசார் மற்றும் நண்பர்கள் கவலை அடைந்துள்ளனர்.
- பணிச்சுமை, மனஉளைச்சல் ஏதாவது இருந்ததா? என பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள ஊஞ்சக்காடு பகுதியை சேர்ந்தவர் அன்புராஜ் (வயது 22). இவர் சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படை சிறப்பு காவல் பிரிவில் 2-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவர் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு மேச்சேரி அருகே உள்ள சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று அன்புராஜ் திடீரென அரளி விதையை அரைத்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறியபடி அன்புராஜை மீட்டு உடனடியாக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.
இதனால் அன்புராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் சோகமாக காணப்பட்டது. அன்புராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்ததும் மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்புராஜியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அன்புராஜ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக வீட்டில் உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார். இந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அம்மா, போகிறேன் மா, நான் இத்தனை நாள் வாழ்ந்ததே உனக்காகதான். எனக்கு என்ன ஆச்சுனு தெரியல.
எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. இத எப்படியும் யாராவது உங்கிட்ட படிச்சு காட்டுவாங்க. நான் யார் கிட்டையும் சொல்லாம போய்டலாம் என்று தான் நினைச்சேன். அப்புறம் எல்லாம் தப்பா பேச ஆரம்பிச்சுடுவாங்க.
என் மணமறிந்து யாருக்கும் கெட்டது செஞ்சதுல்ல, என் தலைக்குள்ள ஏதோ ஓடிட்டு இருக்கு, என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.
வெளியே எங்கேயும் போகமாட்டேன் மா. கூடவே தான் இருப்பேன். அதுக்காகத்தான் வீட்டுக்கு வந்தேன்.
'ஒருவன் நல்லவன் என்பதற்கு அர்த்தம் அவன் இறந்த பின் அவனுக்காக சிந்தும் கண்ணீர் துளிகளால் மட்டுமே கண்டறியப்படுகிறது'.
இவ்வாறு அவர் உருக்கமாக எழுதியிருந்தார்.
இதனால் அவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் பணிச்சுமை, மனஉளைச்சல் ஏதாவது இருந்ததா? என பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது பற்றி அவர் பணியாற்றி வந்த சென்னை ஆவடியில் உள்ள சிறப்பு காவல் படை பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ்காரர் அன்புராஜ் தற்கொலை செய்த விஷயத்தை அறிந்த அவருடன் பணியாற்றிய சக போலீசார் மற்றும் நண்பர்கள் கவலை அடைந்துள்ளனர்.