மாரியம்மன் கோவிலுக்கு பூட்டு போட்ட பொதுமக்கள்- இந்து அறநிலையத்துறை கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு
- கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் கோவிலுக்கு பூட்டு போட்டு இருப்பது தெரிந்தது.
- இதைத்தொடர்ந்து கோவிலுக்கு போடப்பட்டு இருந்த பூட்டு உடைத்து திறக்கப்பட்டு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், தும்பவனம் பகுதியில் பிரசித்தி பெற்ற தும்பவனம் மாரியம்மன் கோவில் உள்ளது.
அப்பகுதியில் உள்ள பலரது குடும்பங்களுக்கு இது குலதெய்வமாக உள்ளது. இங்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். கோவிலை தும்பவனம் பகுதியில் வசிப்பவர்கள் நிர்வகித்து வந்தனர். இதற்கிடையே கடந்த வாரம் இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. மேலும் சில நாட்களுக்கு முன்பு கோவிலுக்கு அறங்காவலர் குழுவையும் நியமித்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கிடையே கோவிலுக்கு பூஜைக்காக பூசாரி சென்ற போது வெளிப்புற கேட்டில் மேலும் ஒரு பூட்டு போட்டு பூட்டப்பட்டு இருந்தது. மேலும் அங்கு பரபரப்பு பேனர் ஒன்றும் வைக்கப்பட்டு இருந்தது. இதனால் பூசாரி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கோவிலை அறநிலையத்துறை கையகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் கோவிலுக்கு பூட்டு போட்டு இருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து கோவிலுக்கு போடப்பட்டு இருந்த பூட்டு உடைத்து திறக்கப்பட்டு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோவிலுக்கு பூட்டு போட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அறங்காவலர்கள் நியமனத்தில் உள்ள சிலர் குறித்தும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.