உள்ளூர் செய்திகள்

ஆடி மாத கூட்ட நெரிசலை பயன்படுத்தி புட்லூர் அம்மன் கோவிலில் பெண் பக்தர்களிடம் நகை பறிக்கும் கும்பல்

Published On 2023-07-24 06:50 GMT   |   Update On 2023-07-24 06:50 GMT
  • புட்லூர் அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிக்கும் சம்பவம் அதிகரித்து உள்ளது.
  • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏராளமானோரிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்து இருப்பதாக கூறப்படுகிறது.

திருவள்ளூர்:

ஆடி மாதம் பிறந்ததை முன்னிட்டு அம்மன் கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இதனால் அனைத்து அம்மன் கோவில்களிலும் தினந்தோறும் கூட்டம் காணப்படுகிறது.

திருவள்ளூரை அடுத்த புட்லூரில் உள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. வழக்கமான நாட்களை விட ஆடி மாதம் முழுவதும் சிறப்பு தரிசனம் செய்ய திரளான பெண்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் புட்லூர் அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறிக்கும் சம்பவம் அதிகரித்து உள்ளது. தினந்தோறும் பெண்பக்தர்கள் தங்களது நகையை பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று பல்வேறு இடங்களில் இருந்து புட்லூருக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் காலை முதலே கோவிலில் கூட்டம் அலை மோதியது.

அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி புதுச்சேரி மாநிலம், ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த கலாவதி என்பவர் அணிந்து இருந்த 4 பவுன் செயினை மர்மகும்பல் பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார்.

இதே போல் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏராளமானோரிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பெரும்பாலானோர் இது பற்றி போலீசில் புகார் கொடுக்காமல் சென்று உள்ளனர். இதனால் மர்ம கும்பலின் கைவரிசை அதிகரித்து உள்ளது.

எனவே ஆடிமாதத்தையொட்டி புட்லூர் அம்மன் கோவிலில் போலீசார் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News