உள்ளூர் செய்திகள் (District)

விவசாயி வீட்டில் 5 கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு

Published On 2024-05-19 06:05 GMT   |   Update On 2024-05-19 06:05 GMT
  • மலைப்பாம்பு சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தில் காடுகளில் இருந்து அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
  • விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே குலையன்கரிசல் வடக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி சுந்தரேச விஸ்வா. இவரது வீட்டில் இருந்த 5 கோழிகள் ஒன்றின் பின் ஒன்றாக காணாமல் போனது.

இதனைத் தேடி அவரது வீட்டிற்கு கிழக்கு பகுதியில் உள்ள வாய்க்கால் கரை ஓரமாக சென்றுள்ளார். அப்போது வயல்வெளி பகுதியில் விலங்குகள் கால்நடைகள் நுழையாமல் இருப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி தப்ப முடியாத நிலையில் 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று நெளிந்து கொண்டு இருந்ததை பார்த்தார்.

இந்த மலைப்பாம்பு தான் அவரது வீட்டில் இருந்த கோழிகளை தின்றுவிட்டு வேறு கோழி கிடைக்காததால் இரை தேடி வயல்வெளி பக்கம் வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவலை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பாம்பை பார்க்க குவிந்தனர். குலையன்கரிசல் ஊர் பகுதியில் இந்த மலைப்பாம்பு சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தில் காடுகளில் இருந்து அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News