திருப்பூர் பஸ் நிலையம் அருகே பா.ஜ.க., பிரமுகரை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி கைது
- அரிவாள் வெட்டுப்பட்டு காயமடைந்த கணேசனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கணேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணேசன் திருப்பூர் 49-வது வார்டு பா.ஜ.க. தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்:
திருப்பூர் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள மது பாரின் முன் பகுதியில் நேற்று இரவு கருவம்பாளையம் பகுதியை சேர்ந்த யோக நாராயணன் (வயது 25) என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்த இமாம்(28) என்பவர் யோக நாராயணனிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து யோக நாராயணன் தனது தந்தை கணேசனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். உடனடியாக கணேசன் விரைந்து வந்து இமாமிடம் தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இமாம் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கணேசனின் கையில் வெட்டினார். இதில் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது இமாம் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் அடிதடி, வழிப்பறி, கொள்ளை, கொலை உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும், தற்போது ஜாமீனில் வெளியே வந்த அவர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் அரிவாள் வெட்டுப்பட்டு காயமடைந்த கணேசனை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணேசன் திருப்பூர் 49-வது வார்டு பா.ஜ.க. தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க. பிரமுகரை பிரபல ரவுடி அரிவாளால் வெட்டிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.