உள்ளூர் செய்திகள்
வடமாநில வாலிபர்களை குறி வைத்து போதைக்காக இருமல் மருந்து விற்ற கடைக்காரர் கைது
- மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்துகளை போதைக்காக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
- போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அம்பத்தூர்:
அம்பத்தூர் தொழிற்பேட்டையை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் பணி புரியும் வட மாநில வாலிபர்கள் போதைக்காக இருமல் மருந்தை பயன்படுத்துவதாக போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அம்பத்தூர் மதுவிலக்கு போலீசார் அத்திப்பட்டு ஐ.சி.எப். காலனியில் உள்ள ஒரு மருந்து கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மருந்து கடை விற்பனையாளரான அசோகன் என்பவர் வட மாநில வாலிபர்களை குறிவைத்து மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்துகளை போதைக்காக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து மருந்து கடைக்காரர் அசோகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 இருமல் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.