உள்ளூர் செய்திகள்

இயேசுபெருமான் பிறந்தநாளில் சகோதரத்துவத்தை நிலைபெறச் செய்ய உறுதியேற்போம்- திருமாவளவன்

Published On 2022-12-24 10:21 GMT   |   Update On 2022-12-24 10:21 GMT
  • ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இயேசுபெருமான், அன்றைய ஆட்சியாளர்களின் அநீதிகளை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பினார்.
  • எளிய மக்களுக்கு விழிப்புணர்வூட்டினார். அன்பையும் கருணையையும் எடுத்துரைத்தார். சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் போதித்தார்.

சென்னை :

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டிசம்பர் 25 உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் திருவிழாவாகக் கொண்டாடப்படும் இயேசு பெருமான் பிறந்தநாளான இப்பெருநாளில் கிறிஸ்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் எமது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இயேசுபெருமான், அன்றைய ஆட்சியாளர்களின் அநீதிகளை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பினார். எளிய மக்களுக்கு விழிப்புணர்வூட்டினார். அன்பையும் கருணையையும் எடுத்துரைத்தார். சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் போதித்தார். ஆட்சியாளர்களின் மக்கள்விரோதப் போக்குகளை அம்பலப்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அதிகார வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் இயேசுபெருமானை சிலுவையில் அறைந்து மரண தண்டனை அளித்தனர். அதனையும் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டார் இயேசுபெருமான்.

எளியோருக்காக குருதி சிந்திய - தனது உயிரைக் கொடுத்த இயேசுபெருமான் சகோதரத்துவத்தையே உலக மாந்தருக்கான நற்செய்தியாக அளித்துச் சென்றார். இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கிறித்தவத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளாக மாறியிருப்பதற்கு அது போதிக்கும் சகோதரத்துவமே அடிப்படையாகும்.

அத்தகைய சகோதரத்துவத்தை இந்திய மண்ணிலும் மலரச்செய்யவும் நிலைபெற வைக்கவும் இந்நன்னாளில் உறுதியேற்போம். சனாதனப் பாகுபாடு அரசியலை- மதவழி சிறுபான்மையினருக்கான வெறுப்பு அரசியலை மேலும் வலுப்பெறவிடாமல் தடுத்து வீழ்த்தவும் மதசார்பற்ற சனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கவும் இப்பெருநாளில் உறுதியேற்போம்.

சகோதரத்துவத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைவருக்கும் எமது இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News