உள்ளூர் செய்திகள்

காந்திகிராம பல்கலைக் கழக பொறுப்பு துணைவேந்தர் திடீர் நீக்கம்

Published On 2022-07-09 15:29 IST   |   Update On 2022-07-09 15:29:00 IST
  • காந்திகிராம பல்கலைக் கழக அதிகாரபூர்வ இணைய தள பக்கத்தில் இருந்தும் துணைவேந்தர் பெயர், படம் நீக்கப்பட்டது.
  • தற்போது அந்த பக்கம் துணைவேந்தர் பெயர், படம் இல்லாமல் வெற்றிடமாக உள்ளது.

சின்னாளப்பட்டி:

திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த மாதேஷ்வரன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பல்கலைக் கழக வேளாண்மைத் துறை மூத்த பேராசிரியர் ரங்கநாதன் பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.

இதனிடையே பல்கலைக் கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய பீகார் மத்திய பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எச்.சி.எஸ்.ரத்தோர் தலைமையில் 3 பேர் கொண்ட தேடுதல் குழுவை மத்திய அரசு நியமனம் செய்தது.

இந்நிலையில் காந்திகிராம பல்கலைக் கழகத்திற்கு மத்திய உயர்கல்வி அமைச்சகத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் துணைவேந்தராக இருந்த மாதேஸ்வரன் ராஜினாமா செய்ததால் பொறுப்பு துணைவேந்தராக பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் ரங்கநாதன் நியமனம் செய்யப்பட்டார்.

அவர் அந்த பொறுப்பிலிருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார். அடுத்து 6 மாத காலம் அல்லது புதிய துணைவேந்தரை நியமிக்கும் வரை காந்திகிராம பல்கலைக் கழகத்திற்கு பொறுப்பு துணைவேந்தராக புதுச்சேரி பல்கலைக் கழக துணைவேந்தர் குர்மித் சிங் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனைதொடர்ந்து பொறுப்பு துணைவேந்தராக இருந்த ரங்கநாதன் உடனடியாக துணைவேந்தர் பொறுப்பில் இருந்து விலகினார்.

காந்திகிராம பல்கலைக் கழக அதிகாரபூர்வ இணைய தள பக்கத்தில் இருந்தும் துணைவேந்தர் பெயர், படம் நீக்கப்பட்டது. தற்போது அந்த பக்கம் துணைவேந்தர் பெயர், படம் இல்லாமல் வெற்றிடமாக உள்ளது.

இதனிடையே காந்திகிராம பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களாக இருந்த பல்கலைக் கழக பேராசிரியர்கள் ஆனந்தகுமார் (தமிழ்துறை), வில்லியம் பாஸ்கரன் (சமூக அறிவியல் துறை), பாலசுந்தரி (ஆங்கில துறை) ஆகிய 3 பேரும் காந்திகிராம பல்கலைக் கழக சட்ட விதிமுறைகளின் படியும், பல்கலைக் கழக மானியக்குழு விதிமுறைகளின் படியும் பல்கலைக் கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம் செய்யும் வரை இதே பல்கலைக் கழகத்தில் உள்ள மூத்த பேராசிரியர் ஒருவரை தான் பொறுப்பு துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என்ற விதிமுறை மீறப்பட்டுள்ளதாக கூறி பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனால் பல்கலைக் கழகத்தில் பரப்பரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

Similar News