உள்ளூர் செய்திகள்

திருச்சியில் இருந்து புறப்பட்ட சிங்கப்பூர், கோலாலம்பூர் விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு: பயணிகள் தவிப்பு

Published On 2025-02-21 11:14 IST   |   Update On 2025-02-21 11:14:00 IST
  • பயண அட்டவணை குளறுபடி ஏற்படும் நிலை இருந்து வருகிறது.
  • விமான சேவைகளை முறைப்படுத்தவேண்டும் என்கின்றனர் பயணிகள்.

திருச்சி:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு விமான சேவைகளாக மஸ்கட் , ஓமன், துபாய், அபுதாபி, பஹ்ரைன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

ஸ்கூட், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, மலிந்தோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த விமான சேவைகளை அதிக அளவில் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா விமானங்களில் கடந்த சில நாட்களில் அதிக அளவிலான தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு வருவதால் பயணிகள் வெளிநாடுகளுக்கு செல்வது தாமதமாகி பெரும் சிரமங்களை சந்திக்கும் நிலை உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் மறுநாள் மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனால் அடுத்த நாள் செல்ல இருந்த குவைத் விமானத்தில் பயணிகள் அனுப்ப முடியாத காரணத்தினால் அவர்களும் பெரும் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 153 பயணிகளுடன் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டது.

அந்த விமானம் புறப்பட்டு ரன்வே அருகில் சென்ற போது தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திருப்பி கொண்டுவரப்பட்டது.

தொழில்நுட்பக் கோளாறினை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த விமானம் கோளாறு சரி செய்யப்பட்டு அதிகாலை 5.10 மணிக்கு திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது.

இதேபோன்று திருச்சியில் இருந்து கோலாலம்பூர் நோக்கி ஏர் ஏசியா விமானம் நேற்று இரவு 10.30 மணிக்கு 144 பயணிகளுடன் புறப்பட்டது. புறப்படும் நேரத்தில் இந்த விமானத்தில் தொழில்நுட்பக் கூடாது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதனை சரி செய்யும் பணியில் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து அந்த கோளாறு சரி செய்யப்பட்டு இந்த விமானம் நள்ளிரவு 1.10 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டு சென்றது. விமானங்களில் அதிக அளவில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படும் காரணத்தினால் பயணிகள் பெறும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர விமான நிறுவனத்தினரும் விமான நிலைய அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் இந்த விமானங்களின் தொடர்ச்சியாக வேறு நாடுகளுக்கு செல்ல இருப்பவர்கள் இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு ஏற்படும் போது அவர்களின் பயண அட்டவணை குளறுபடி ஏற்படும் நிலை இருந்து வருகிறது. இதற்கு விமானத்துறை உயர் அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் பயணிகள்.

உரிய நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்படுவது சரியான நடவடிக்கையாக இருந்தாலும், அதனால் பயணிகளூக்கு ஏற்படும் சவுகரியம் சொல்லிமாளாது என்ற நிலை உள்ளது.

மேலும் விமானம் புறப்பட்டபின் இதுபோன்ற நிலை உண்டானால் அதனால் ஏற்படும் சிக்கல்களும் அதிகம். வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் விமான சேவைகளை முறைப்படுத்தவேண்டும் என்கின்றனர் பயணிகள்.

Tags:    

Similar News