கணவரை இழந்த பெண்ணுக்கு வீடு கட்ட நிதி ஒதுக்கிய கலெக்டர்
- மனுவின் தன்மையை கூறி அரசின் நலத்திட்டங்கள் அந்த பெண்ணுக்கு வழங்குவது குறித்து ஆலோசித்தார்
- கலெக்டர் தன் வைப்பு நிதியில் ரூ.75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை நேரடியாக வழங்கினார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மனைவி சந்தியா (வயது 43). இவர்களுக்கு அனுப்பிரியா (13), அன்பு (12) எனற 2 பிள்ளைகள் உள்ளன. மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் இருதயராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதனால் 2 பிள்ளைகளோடு இனி எப்படி வாழ்வேன். போதிய வருமானமும் கிடையாது. என்ன செய்ய போகிறேன் என சந்தியா தவித்தார். மேலும் வசிக்க வீடு கூட இல்லாமல் நடுவீதிக்கு வந்த சந்தியா ஆரமரத்தடியில் வசித்து வந்தார்.
வாழ்க்கையின் விரக்திக்கே சென்ற சந்தியா, தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரின் மனிதநேயமிக்க செயல், உதவும் குணம், அரசின் திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேர நடவடிக்கை எடுப்பது, ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் நிலையை அறிந்து அரசு சார்பில் வீடு கட்டி கொடுப்பது போன்ற பல்வேறு நல்ல செயல்களை செய்து வருவது நினைவுக்கு வந்தது.
இதனால் கலெக்டரிடம் நமது நிலையை எடுத்து கூறி முறையிட்டால் வாழ்வில் ஒளி பிறக்கும் என உறுதியாக நம்பிய சந்தியா, வாராந்திர குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு இரு பிள்ளைகளுடன் சென்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரிடம் நிலைைமையை எடுத்து கூறி மனு அளித்தார்.
இந்த மனுவை படித்து பார்த்த கலெக்டர், சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை அழைத்து மனுவின் தன்மையை கூறி அரசின் நலத்திட்டங்கள் அந்த பெண்ணுக்கு வழங்குவது குறித்து ஆலோசித்தார்.
பின்னர் உடனே சந்தியாவிற்கு கும்ப கோணம் அசூர் அருகே வீடு கட்ட வீட்டு மனை பட்டாவும், ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வீடு கட்டித்தர நிதியையும் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஒதுக்கீடு செய்தார்.
மேலும் அவரது குடும்ப சூழ்நிலையை கருத் தில் கொண்டு மாவட்ட கலெக்டர் தன் வைப்பு நிதியில் ரூ.75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை நேரடியாக வழங்கினார். பின்பு தனது சொந்த பணத்தில் தொழில் செய்வதற்காக ரூ.10,000 தனியாக வழங்குவதாகவும் கூறினார்.
கலெக்டரின் மனிதநேயமிக்க உதவும் செயலை பார்த்து சந்தியா ஆனந்த கண்ணீர் விட்டு நன்றி கூறினார். கருணை உள்ளத்தோடு உதவிய கலெக்டருக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது என உணர்ச்சி பெருக்கில் சந்தியா கூறினார்.