திருத்தணி அருகே மதுக்கடையில் துளை போட்டு கொள்ளை
- திருத்தணி பகுதியில் கடைகளில் துளைபோட்டு கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி:
திருத்தணி அருகே உள்ள வள்ளியம்மாபுரம், அரக்கோணம் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் மதுக்கடையை பூட்டிச் சென்றனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வந்த மர்ம கும்பல் மதுக்கடையின் பக்கவாட்டு சுவரில் துளைபோட்டு உள்யே புகுந்தனர். அவர்கள் கடையில் இருந்து சில்லறையாக இருந்த ரூ.14 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்தனர்.
மேலும் அங்கிருந்த லாக்கரை உடைக்க முடியாததால் ஏராளமான மதுபாட்டில்களை மூட்டை கட்டி அள்ளிச் சென்றுவிட்டனர். லாக்கரில் பல லட்சம் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை மதுக்கடையின் சுவரில் துளை போடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருத்தணி போலீசுக்கும், கடையின் சூப்பர்வைசர் கிரிராஜூக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
திருத்தணி பகுதியில் கடைகளில் துளைபோட்டு கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. கடந்த வாரம் மத்தூர் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் கடையின் சுவற்றில் துளை போட்டு புகுந்து அங்கிருந்த பணம் மற்றும் மதுபாட்டில்களை அள்ளிச்சென்றனர்.
மேலும் அங்கேயே உட் கார்ந்து விடிய விடிய மது குடித்துவிட்டு சென்று இருந்தனர். கொள்ளையர்களை பிடிக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.