மழையால் மாடுவிடும் விழா நிறுத்தம்
- விழா குழுவினருடன் காளை உரிமையாளர்கள் வாக்குவாதம்
- 101 பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பரமனந்தல் அருகே உள்ள காமராஜ் நகரில் முதலாம் ஆண்டு மாடுவிடும் திருவிழா இன்று காலை நடைபெற இருந்தது.
இதில் கலந்துகொண்டு பரிசு பெறும் காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம் உள்பட மொத்தம் 101 பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அந்த கிராம மக்கள் செய்தனர்.
கனமழை
விழா நடக்கும் வீதியில் இருப்புறமும் மரக்கட்டையில் ஆன தடுப்புகள் கட்டப்பட்டு இருந்தது.
சாலை நடுவே மண் கொட்டப்பட்டிருந்தது. இதில் வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டுவரப்பட்டது.
வாக்குவாதம்
நேற்று இரவு முதல் இன்று காலை 7 மணி வரை செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் விழா நடக்கும் வீதி சேரும் சகதியாக மாறியது. விழா நடத்த முடியாத சூழல் உருவாகியது.
இதனால் விழா பாதியில் நின்றுபோனது. இதனால் விழா குழுவினருக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. விழாவை மழை விட்ட பிறகு தொடர்ந்து நடத்த வேண்டும் என காளைகளின் உரிமையாளர்கள் வலியுறுத்தினர். இருப்பினும் விழா பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் காளைகளை கொண்டு சென்ற உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.