முசிறி சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் அதிசய தீர்த்த கிணறு கண்டுபிடிப்பு- பக்தர்கள் பரவசத்துடன் வழிபாடு
- புதர் மண்டி கிடந்ததால் அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதை கூட யாரும் அறியவில்லை.
- சித்தர்கள் தவம் இருக்கும் இடமாக இருப்பதால் இங்கு சத்தமின்றி அமைதியுடன் வணங்கி செல்கிறோம்.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறியில் பிரசித்திபெற்ற சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் குழந்தைப்பேறு, தொழிலில் அபிவிருத்தி அளிக்கும் பரிகார தலமாக திகழ்கிறது.
தனது சாபம் நீங்குவதற்காக சந்திரன் சிவபெருமானை வழிபட்டது, மிருக சீரிஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியது போன்ற பல்வேறு சிறப்புகளை இந்த கோவில் கொண்டுள்ளது. இந்த கோவிலில் தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.
இந்த நிலையில் இங்கு சமீபத்தில் அதிசய தீர்த்தக்கிணறு வெளிப்பட்டு பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி உள்ளது. கோவிலின் தென்மூலை பகுதி பல ஆண்டுகாலமாக புதர் மண்டி காணப்பட்டது. அந்த பகுதி பெரியவர்கள் யாரும் அங்கு சென்றதில்லை. கோவிலின் ஒரு பக்கச்சுவர் மட்டும் அதில் தென்பட்டிருந்தது. பல ஆண்டுகளாகவே சிறு குழந்தைகள் கூட அந்த பகுதிக்கு செல்ல பயப்படுவார்களாம்.
புதர் மண்டி கிடந்ததால் அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதை கூட யாரும் அறியவில்லை. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் திருப்பணி வேலைகளுக்காக அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டது. அப்போது அந்த புதருக்குள் அதிசய தீர்த்தக்கிணறு இருப்பதை கண்டு அப்பகுதியினர் அதிசயித்தனர். தீர்த்த கிணறின் மேல்பக்க சுவரின் 4 முனிவர்கள் காவல் காப்பது போன்ற சிற்பம் காணப்பட்டது.
இந்த சூழலில் அங்கு நின்ற பக்தர் ஒருவர் மூலமாக அருள்வாக்கு வந்தது. அந்த அதிசய தீர்த்த குளத்தின் உள்ளே சுமார் 400 அடி ஆழத்தில் முசுகுந்த முனிவர் எனும் சித்தரும், 200 அடி ஆழத்தில் அவரது சீடர் நாதமுனி சித்தரும் தவம் இருப்பதாகவும், அவர்களது தவத்திற்கு சீடர்கள் 4 முனிவர்கள் காவலாக இருப்பதாகவும் அருள்வாக்கு வெளிப்பட்டது. இதை கேட்டு பக்தர்கள் மெய்சிலிர்த்து போயினர்.
இது தொடர்பாக பக்தர்கள் சிலர் கூறியதாவது:-
இந்த கோவில் அருகே ஏற்கனவே ஒரு கிணறு உள்ளது. தற்போது புதிதாக துலங்கி உள்ள இந்த கிணற்றில் சித்தர்கள் தவம் இருப்பது குறித்து அருள்வாக்காக கிடைத்த தகவல் அதிசயிக்கத்தக்கதாகும். இந்த கிணறு வெளிப்பட்ட பின்னர் கோவில் திருப்பணிகள் அதிவேகத்தில் நடைபெற்று வருகின்றன.
மேலும் இங்குள்ள இறைவன் சந்திரமவுலீஸ்வரருக்கு தற்போது இந்த தீர்த்த கிணற்றில் இருந்துதான் தண்ணீர் எடுத்து அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த கோவிலின் பின்பக்கம் சித்தர் ஐக்கியமான சித்தர் பீடம் அமைந்திருப்பது இன்னும் சிறப்பக இருக்கிறது.
இந்த அதிசய தீர்த்த கிணற்றில் சித்தர்கள் வாசம் செய்வதால் இந்த கிணற்றை வணங்கி வருகிறோம். சித்தர்கள் தவம் இருக்கும் இடமாக இருப்பதால் இங்கு சத்தமின்றி அமைதியுடன் வணங்கி செல்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த கோவில் அர்ச்சகர் பரமேஸ்வர குருக்கள் கூறுகையில், எனக்கு விவரம் தெரிந்தவரை இந்த இடத்தில் இப்படியொரு அதிசய தீர்த்த கிணற்றை நான் பார்த்ததில்லை. இப்போது இந்த கிணறு வெளிப்பட்ட பின்னர் ஆச்சரியப்படும் அளவுக்கு பல்வேறு விசயங்கள் நடக்கின்றன. இதை சந்திரபுஷ்கரணை தீர்த்தம் என்று அழைக்கிறோம். தற்போது திருப்பணி வேலைகள் நடப்பதால் இந்த கிணற்றை சுற்றிலும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு உள்ளது என்றார்.
முசிறி நகரம் 10-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ மன்னன் முசுகுந்தனால் ஆளப்பட்டது. இந்த நகரின் ஆரம்பகால பெயர் "முசுகுந்தபுரி". இதுவே மருவி பின்னர் முசிறி என்று ஆனது. முசுகுந்த மன்னனே சித்தராகி கோவில் தீர்த்த கிணற்றில் ஐக்கியம் ஆகி தவத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி பக்தர்களை பரவசப்படுத்தி உள்ளது.
இதனிடையே புதிதாக துலங்கி உள்ள அதிசய தீர்த்த கிணற்றை பக்தர்கள் பக்தியுடன் சென்று பார்த்த வண்ணம் உள்ளனர். முசிறி மட்டுமின்றி அக்கம் பக்கத்து கிராமத்தினர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பலரும் கோவிலுக்கு வர தொடங்கி உள்ளனர்.