நாளை பரந்தூர் செல்கிறார் விஜய்- ஏகனாபுரம் மக்களை சந்திக்கும் இடம் இன்று தேர்வு
- பரந்தூர் செல்லும் விஜய்க்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்தனர்.
- அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே வாகனங்களில் வர வேண்டும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் 2-வது பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 900 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் போராட்ட குழுவினரை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக அனுமதி கேட்டு, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகத்திடம், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மனு அளித்தனர். அதன்படி ஏகனாபுரம் மக்களை சந்திக்க விஜய்க்கு, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் அனுமதி அளித்தார். இதையடுத்து விஜய் நாளை (20-ந்தேதி) பரந்தூர் சென்று ஏகனாபுரம் மக்களை சந்தித்து பேசுகிறார்.
இதற்கிடையே பரந்தூர் செல்லும் விஜய்க்கு பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்தனர். போலீசார் அனுமதி அளித்த இடத்தில் மட்டும் தான் போராட்ட குழுவினரை விஜய் சந்திக்க வேண்டும். அதிக கூட்டத்தை கூட்டக்கூடாது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே வாகனங்களில் வர வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பை முடிக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தவிதமான நிகழ்வுகளும் நடைபெறக்கூடாது ஆகிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இந்த நிலையில் விஜய், ஏகனாபுரம் மக்களை சந்திக்கும் இடம் இன்னும் முடிவாகவில்லை. ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் விஜய் மக்களை சந்திக்க போலீசார் அனுமதிக்க வேண்டும் என்று போராட்டக் குழுவினர் வேண்டுகோள் வைத்துள்ளனர். ஆனால் பொதுவெளியில் விஜய் பொதுமக்களை சந்திக்க அனுமதி அளித்தால் ஏராளமான கூட்டம் கூடி விடும். இதனால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும். எனவே வீனஸ் கார்டன் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில், விஜய் மக்களை சந்திக்க ஏற்பாடுகளை செய்யுமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனால் விஜய், ஏகனாபுரம் மக்களை சந்திக்கும் இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக போலீசாருடன், போராட்ட குழுவினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் விஜய், ஏகனாபுரம் மக்களை சந்திக்கும் இடம் இன்று தேர்வு செய்யப்படுகிறது.