கொட்டித் தீர்த்த கனமழை: குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
- காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
- குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக மாவட் டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றா லம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேலும், காலையில் மழை குறைந்துள்ள நிலையில், அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழையும் பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்து வருகிறது.