திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்கடன்
- கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது
- அதிகாரி தகவல்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்பட உள்ளதாக கூட்டுறவு இணைப்பதிவாளர் நடராஜன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சரகத்தில் 71 சங்கங்கள், திருவண்ணாமலை சரகத்தில் 88 சங்கங்கள் என 160 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
மாவட்டத்தில் 37 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 4 நகர கூட்டுறவு வங்கிகளும், 8 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளும், ஊரக வளர்ச்சி வங்கிகளும் செயல்பாட்டில் உள்ளன.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ஓராண்டிற்கு வட்டியில்லா பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு மூலதன கடன் மற்றும் மாற்றுத் திறனாளி களுக்கான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் குறைந்த வட்டியில் விவசாயம் அல்லாத நகைக்கடன், தானிய ஈட்டுக் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், தாட்கோ. டாப்செட்கோ, டாம்கோ கடன்களும் வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 2023-24 ஆம் நிதியாண்டில் ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்பட உள்ளது. 205 கோடி ரூபாய் வட்டியில்லா கால்நடை பராமரிப்பு மூலதன கடன், 876 கோடி நகை கடன், 202 கோடி ரூபாய்க்கு மகளிர் சுய உதவிக் குழு கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு 4 கோடி ரூபாய் கடன், மத்திய கால முதலீட்டு கடன் 25 கோடி, இதர கடன்கள் 38.80 கோடி ஆகியவைகள் குறைந்த வட்டியில் வழங்கப்பட உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவையான கடன் உதவிகளை அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் அருகில் உள்ள கிளைகள், கூட்டுறவு நிறுவனங்களில் குறைந்த வட்டியில் பெற்று பயன்பெற வருமாறு கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் நடராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.