திருவண்ணாமலையில் 2-வது நாளாக பக்தர்கள் கிரிவலம்
- சாமி தரிசனத்துக்கு 5 மணி நேரமானது
- சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.58 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி நேற்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.
பவுர்ணமி இன்று காலை 8.17 மணி வரை நீடித்ததால் பக்தர்கள் 2-வது நாளாக கிரிவலம் சென்றனர்.
கிரிவலம் சென்ற பக்தர்கள் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் வழிபாடு செய்தனர்.
இதனால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பவுர்ணமியையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் அனைவரும் நீண்ட பொது வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரம் ஆனது.
போலீசார் தொடர்ந்து கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப இன்றும் சென்னை, வேலூர், விழுப்புரம், பெங்களூர், திருப்பதி ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.