உள்ளூர் செய்திகள்

பழங்கால சிலைகள் கண்டெடுப்பு

Published On 2023-07-17 15:22 IST   |   Update On 2023-07-17 15:22:00 IST
  • மாவட்ட நிர்வாகம், வரலாற்று அருங்காட்சியகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்
  • தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தினால் பல்வேறு வரலாற்று செய்திகள் தெரியவரும்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த படவேடு கிராமத்தில் சம்புவராயர் ஆய்வுமைய அறக்கட்டளையின் செயலாளர் அமுல்ராஜ் தனது குழுவினருடன் வரலாற்று சிற்பங்கள் குறித்த கள ஆய்வில் ஈடுபட்டார்.

அப்போது படவேடு கிராமத்தில் அரசமரத்தின் அருகே அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் பல்வேறு சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதில் கைக்கூப்பியபடி உள்ள ராஜா சிலை, அம்மன் சிரசு, நரசிம்மர் சிலை ஆகியவை ஒரே இடத்தில் கிடைத்ததுடன், கோவில் வாசல் மற்றும் அரசமரத்தடியில் வரலாற்று கல்வெட்டுகளும் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து அமுல்ராஜ் கூறியதாவது:-

13-ம் நூற்றாண்டில் சம்புவராய மன்ன ர்களின் தலைநகரமாக படவேடு கிராமம் புகழ்பெற்று விளங்கியதாக கருதப்படுகிறது.

இங்கு நிலப்பகுதியில் அகக்கோட்டை (பெரிய கோட்டை), புறக்கோட்டை (சிறியகோட்டை) ஆகிய 2 கோட்டைகளும், ஜவ்வாதுமலை தொடரில் அமைந்துள்ள ராஜகம்பீரன் மலையில் ஒரு மலைக் கோட்டையையும் அவர்கள் அமைத்துள்ளதாக வரலாற்று பதிவேடுகள் கூறுகிறது. இந்த படவேடு நகரத்தை சுற்றிலும் ஆங்காங்கே பல்வேறு கோவில்கள் கட்டி உள்ளனர்.

அந்த கோவில்கள் போர் நடந்தபோதும், சரியான பராமரிப்பு இல்லாததாலும் காலப்போக்கில் அழியத் தொடங்கின.

சம்புவராய மன்னர்கள் கட்டிய கோயில்களில் ஒன்றுதான் இந்த படவேடு மாரியம்மன் கோவில். இதற்கு எடுத்துக்காட்டாக பழங்கால சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் இன்றளவும் இந்த கோவிலில் அழியாமல் ஆதாரமாக விளங்குகிறது.

இங்குள்ள சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் மிகவும் முக்கியமான வையாகும்.

இங்கு தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தினால் பல்வேறு வரலாற்று செய்திகள் தெரியவரும்.

மேலும் கண்டெடுக்கப்படும் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம், வரலாற்று அருங்காட்சியகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News