மங்கலம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்
- குப்பைகளை எரிக்கும் எந்திரம் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.
- அனைத்து வீடுகளும் குடிநீர் வசதி பெற்ற ஊராட்சி என பொதுமக்களிடம் அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மங்கலம்:
திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி-புக்குளிபாளையம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்திற்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார்.
மேலும் இதில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகி, மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், மற்றும் திருப்பூர் மாவட்ட உதவி திட்ட அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்), மங்கலம் பகுதி கனரா வங்கி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் குப்பைகளை எரிக்கும் எந்திரம் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.அதேபோல சுமார் 40லட்சம் மதிப்பிலான குப்பைகள் எரிக்கும் எந்திரத்தை தமிழக அரசு மங்கலம் ஊராட்சிக்கு வழங்க வேண்டும் , திருப்பூர் மாநகராட்சி எல்லையில் இருந்து மங்கலம் ஊராட்சி எல்லை வரை உள்ள நொய்யல் ஆற்றின் இருகரைகளிலும் தார் சாலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மங்கலம் ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கியதை தொடர்ந்து கிராம சபை கூட்டத்தில் அனைத்து வீடுகளும் குடிநீர் வசதி பெற்ற ஊராட்சி என பொதுமக்களிடம் அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மங்கலம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தூய்மைப்பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.