தாராபுரம் கொழுமங்குளி மக்கள் தொடர்பு முகாமில் ரூ.1.58 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி - கலெக்டர் வழங்கினார்
- மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு 170 பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் மீது தனி கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், கொழுமங்குளி கிராம சேவை மைய வளாகத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு 170 பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின்னர் அவர் தெரிவித்ததாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு ஊராட்சியை தேர்ந்தெடுத்து அரசுத்துறை அலுவலர்கள் அங்குள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வும் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் தாராபுரம் வட்டம், கொழுமங்குளி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் முக்கிய நோக்கம் மக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பது ஆகும். இந்த பகுதியில் உள்ள கிராமங்களான கொழுமங்குளி, அண்ணா நகர், ராசிபாளையம், கள்ளிப்பாளையம், தம்புரெட்டிபாளையம், ஆண்டிபாளையம், பேராங்காட்டுப்பதி, கள்ளிமேட்டுபாளையம், ஓரம்பபுதூர், கம்மாளபாளையம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்கள் கவனத்தில் எடுத்து க்கொண்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமையளித்து பணியாற்றிட வேண்டும்.
மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றி தொடர்புடைய அலுவலர்கள் இங்கு பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்கள். அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் மீது தனி கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். மேலும் கடைகோடி கிராமம் வரை அரசின் திட்டங்கள் சென்று சேர்வதை தொடர்புடைய அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் தாட்கோ சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.93.36 லட்சம் மதிப்பில் லோடு வாகனம், ஆட்டோ, டூரிஸ்ட் வாகன கடனுதவி, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 71 பயனாளிகளுக்கு ரூ.46.39 லட்சம் மதிப்பீட்டில் இணையவழி பட்டா , 15 பயனாளிகளுக்கு ரூ.18,900 மதிப்பில் முதியோர் உதவித்தொகை என மொத்தம் 170 பயனாளிகளுக்கு ரூ.1,58,30,247 மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார். தொடர்ந்து மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு மருந்து பெட்டகத்தினையும், கலைஞரின் கண்ணொலி காப்போம் திட்டத்தின் கீழ் 3 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளையும் கலெக்டர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) திருக்குமரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரஞ்சித்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குமாரராஜா, தாராபுரம் வருவாய் வட்டாட்சியர் கோவிந்தசாமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.