தீபாவளி பண்டிகை வனப்பகுதியில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை - ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் எச்சரிக்கை
- வனப்பகுதி அருகே அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால், பறவைகள், வனவிலங்குகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.
- வன எல்லையை ஒட்டியுள்ள கிராம பகுதிகள், தனியார் விடுதிகளுக்கும் துண்டு பிரசுரம் வினியோகித்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது
உடுமலை:
நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக, மக்கள் பலரும், புத்தாடை, பட்டாசு மற்றும் இனிப்புகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய கிராமங்கள், செட்டில்மெண்ட் பகுதிகளில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும், பல்வேறு விதிமுறை வகுத்து பசுமை தீபாவளி கொண்டாடவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் கூறியதாவது:-
வனப்பகுதி அருகே அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால், பறவைகள், வனவிலங்குகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன.குறிப்பாக அரியவகை பறவைகள், தனது வாழ்விடங்களை விட்டு மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளை தேடி சென்று விடும் அபாயம் உள்ளது. எனவே, வனம் ஒட்டிய கிராமங்களில் வசிக்கும் மக்கள், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. முடிந்த வரை பட்டாசு இன்றி பசுமை தீபாவளியை கொண்டாட கிராம மக்கள் முன்வர வேண்டும். வனப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள், பட்டாசு வெடிப்பதில்லை. இருப்பினும், அந்தந்த செட்டில்மெண்ட் பகுதிகளிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதேபோல வன எல்லையை ஒட்டியுள்ள கிராம பகுதிகள், தனியார் விடுதிகளுக்கும் துண்டு பிரசுரம் வினியோகித்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தீபாவளி கொண்டாட்டத்துக்கு வருவோரை வனத்துக்குள் அத்துமீறி அழைத்து செல்வதையும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு, வனக்குழுவினர் ரோந்து பணியில் ஈடுபடுவர். விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.