மெய்ப்பொருள் நாயனார் குரு பூஜை விழா
- சிவனடியார்களுக்கு பாத பூஜை நடந்தது
- மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது
கீழ்பென்னாத்தூர்:
தமிழகத்தில் திருக்கோவிலூர் பகுதியை ஆட்சி செய்து வந்த மெய்ப்பொருள் நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார்.
மெய்ப்பொருள் நாயனாரின் வம்சாவழி யினர் கீழ்பென்னாத்தூர் தாலுகாவில், சாணிப்பூண்டி கிராமத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் உத்திரம் நட்சத்திரம் அன்று குருபூஜை விழாவை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டிற்கான குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கூட்டேரிபட்டு ஆடல் அரசரின் சிவகணப் பேரிகை சிவனடியார் சுவாமிகள் தலைமை தாங்கினார்.
வடசேரி நேச நாயனார் அறக்கட்டளை துணைத் தலைவர் முருகன், சாணிப்பூண்டி கணேசன், இந்திராணி கணேசன், தையல்நாயகி ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மெய்ப்பொருள் நாயனார் திருமடம் நிறுவனர் விநாயக மூர்த்தி அடியார் அனைவரையும் வரவேற்றார்.
திருவாசக சித்தர் தாமோதரன், வாதவூரடிகள் கரூர் ஸ்ரீநந்தீஸ்வரர் ஞானபீடம் சுவாமி சித்தகுருஜி, திருவண்ணா மலை அடுத்த சக்கரத்தாழ்மடை கமலா பீடம் நிறுவனர் சீத்தாசீனுவாசசுவாமி ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். திருமஞ்சன வழிபாடு சிவனடியார்களுக்குப் பாத பூஜையுடன் விழா தொடங்கியது.
அதன்பிறகு ஸ்ரீமெய்ப்பொருள் நாயனாருக்கு சிவகண வாத்தியங்கள் முழுங்க மகா தீபாராதனை செய்து, 10,008 ருத்ராட்ச சிவலிங்க தரிசனத்துடன் மெய்ப்பொருள் நாயனார் வீதி உலா நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் பாபு ராதா கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் ஜோதி கலை செல்வி விநாயகமூர்த்தி, அபிராமி, மகாலிங்கம், சென்னை ரமேஷ் சதுரகிரியார், சாணிப்பூண்டி ரஞ்சித்குமார், தரணிகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
ஆன்மீக தொண்டு செய்தவர்களுக்கு விருதுகளும், 2021-22ம் கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பில் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் திருவாசக சித்தர் தாமோதரன் வழங்கினார். முடிவில் ஓய்வு பெற்ற உதவி தொடக்கக்கல்வி அலுவலர் வைப்பூர் ஜோதிலிங்கம் நன்றி கூறினார்.