திருவொற்றியூர் எம்.ஜி.ஆர். நகரில் 10-க்கும் மேற்பட்ட தெருக்களில் தேங்கி கிடக்கும் கழிவு நீர்
- கழிவு நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தி பெருகி பலருக்கு காய்ச்சல் போன்ற சுகாதாரக் கேடு விளைவிக்கிறது.
- மழை நீர் வடிகால் பணிகளை தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் பழைய எம்ஜிஆர் நகரில் 10-க்கும் மேற்பட்ட தெருக்களில் சுமார் 500 வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் தினக்கூலி வேலைகள் பார்த்து வருகிறார்கள். இங்கு பிரதான சாலை அருகே கொசஸ்தலை வடிநிலத்திட்டத்தின் கீழ் ராட்சத மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மழைநீர் வடிகால் உயரமாக இருப்பதால் அந்தப் பகுதியை ஒட்டி உள்ள தெருக்களில் உள்ள குடியிருப்புகள் தாழ்வான நிலையில் இருந்து வருகிறது. இதனால் பழைய எம்.ஜி.ஆர். நகர், பெரியா நகர் பிரதான சாலையில் உள்ள இணைப்பில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இதனால் அந்த தெருகளில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மேலும் மழை நீர் வடிகாலின் இருபுறமும் குளம்போல் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கட்டை பாலம் போடப்பட்டு அதன் மூலம் நடந்து செல்கிறார்கள்.
மேலும் பழைய எம்.ஜி.ஆர். நகர், 3-வது தெருவில் கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளது. இந்த கழிவு நீரில் தத்தளித்தபடியே பள்ளி மாணவர்கள் கல்லூரிக்கு செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து மக்களும் கழிவுநீரில் நடந்து செல்லும் சூழ்நிலை இருந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் மூக்கை மூடியபடியே நடந்து செல்கிறார்கள். அந்த கழிவு நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தி பெருகி பலருக்கு காய்ச்சல் போன்ற சுகாதாரக் கேடு விளைவிக்கிறது.
இது பற்றி பொதுமக்கள் தெருக்களில் தேங்கி நிற்கும் சாக்கடை கழிவை நாங்களே அகற்றி வருகிறோம் அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை நீர் வடிகால் பணிகளை தொடர்ந்து நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்கி உள்ள தெருக்களில் உடனடியாக அகற்றி மழை நீர் வடிகால் பணி விரைவில் தொடங்கப்பட்டு முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.