உள்ளூர் செய்திகள்

பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த 140 வீடுகள் இடித்து அகற்றம்

Published On 2024-07-01 07:11 GMT   |   Update On 2024-07-01 07:11 GMT
  • வாகனங்கள் வரமுடியாத அளவுக்கு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
  • வருவாய்த் துறையினர் குடியிருப்பு வாசிகளுடன் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

பழனி:

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் உள்ள பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் வரும் பாதையான அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதனையடுத்து பல்வேறு புகார்கள் வந்ததன் பேரில் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் முக்கிய சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் வாகனங்கள் வரமுடியாத அளவுக்கு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இருந்தபோதும் ஒருசில இடங்களில் ஆக்கிரமிப்புகள் நீடித்து வந்தது.

பழனி மலை அடிவாரத்தில் மேற்கு கிரிவீதியில் அண்ணா செட்டிமடம் என்ற இடம் உள்ளது. பாதவிநாயகர் கோவிலில் இருந்து மின்இழுவை ரெயில்நிலையம் செல்லும் முக்கிய சந்திப்பான இங்கு 100ஆண்டுகளுக்கும் மேலாக பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிரி வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் அண்ணா செட்டிமடம் பகுதியில் குடியிருக்கும் 140 குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இதற்கு அவகாசம் கேட்ட வருவாய்த்துறையினருக்கும் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து வருவாய்த் துறையினர் குடியிருப்பு வாசிகளுடன் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து 139குடும்பங்களுக்கு பழனியில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள தாதநாயக்கன்பட்டியில் தலா 1½ சென்ட் இடம் வழங்கி கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் நேற்று அனைவரும் தங்களது வீடுகளை காலி செய்தனர். தொடர்ந்து கோார்ட்டு உத்தரவின் பேரில் இன்று அதிகாலை முதலே வருவாய்த்துறை, தேவஸ்தான நிர்வாகமும் இணைந்து டி.எஸ்.பி தனஞ்செயன் தலைமையில் ஏராளமான போலீசார் உதவியுடன் 10க்கும் மேற்பட்ட ஜே.சி.பி. வாகனங்களை கொண்டு ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் பழனி மலை அடிவாரத்தில் படிப்பாதை அருகில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த பிரபல தனியார் பஞ்சாமிர்த கடையான சித்தநாதன் பஞ்சாமிர்த கடையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடித்து அகற்றப்பட்டது. குடியிருப்புகளை அகற்றும்போது அங்கு ஏற்கனவே வசித்த குடியிருப்பு வாசிகள் தடுத்து இடையூறு செய்யலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பழனி மலை அடிவாரத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இடித்து அகற்றும்பணி நடைபெற்ற போது பல ஆண்டுகளாக குடியிருந்தவர்கள் சாலை ஓரத்தில் நின்று தாங்கள் வசித்த வீடு இடிபடுவதை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

Tags:    

Similar News