சுனாமி நினைவு தினம்: வேளாங்கண்ணியில் மீனவர்கள் பேரணியாக சென்று கண்ணீர் அஞ்சலி
- மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
- மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
நாகப்பட்டினம்:
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி பேரலை தாக்கியது.
இதனால் கடலோர கிராமங்கள் முற்றிலும் பாதிக்கபட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் நாகை மாவட்டத்தில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு வேளாங்கண்ணி கடற்கரையில் வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் மீனவர்கள், வணிகர்கள், பொதுமக்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டைய அணிந்து அமைதி பேரணியாக 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றனர்.
பின்னர் சுனாமியால் உயிர் இழந்தவர்களை அடக்கம் செய்த நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மும்மதத்தினரும் உயிரிழந்ததின் நினைவாக அங்கு பகவத் கீதை, குரான், விவிலியம் உள்ளிட்டவைகளில் இருந்து வாசகங்களை அந்தந்த மதத்தினர் வாசித்து ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர்.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அவர்களுக்கு பிடித்த காரம், இனிப்பு, குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவு வகைகளை வைத்து மாலை அணிவித்து மலர் தூவி அங்கு கண்ணீர் அஞ்சலி செய்து வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள 25 மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லாமல் அந்தந்த மீனவர் கிராமங்களில் உள்ள நினைவு ஸ்தூபியில் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் அடைக்கப்பட்டுள்ளது.