உள்ளூர் செய்திகள்

50 ஆண்டுகளாக தீப்பெட்டி தொழிலுக்காக குரல் கொடுத்து வருபவர் வைகோ - தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் அறிக்கை

Published On 2023-07-15 14:25 IST   |   Update On 2023-07-15 14:25:00 IST
  • இந்தியாவின் 90 சதவீத தீப்பெட்டித் தேவையையும், உலக நாடுகளின் 40 சதவீத தீப்பெட்டித் தேவையையும், தமிழகத் தீப்பெட்டி நிறுவனங்கள் தான் பூர்த்தி செய்து வருகின்றன.
  • தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்கள் விலை நாளுக்குநாள் அதிகரித்து வந்தன.

கோவில்பட்டி:

தமிழகத்தின் தென்மாவட்டங்கள் தீப்பெட்டித் தொழிலில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. சிவகாசியை சேர்ந்த அய்யநாடார், சண்முக நாடார் போன்ற தொழில் அதிபர்கள் 1922-ல் கொல்கத்தா சென்று தீப்பெட்டித் தொழிலைக் கற்று வந்து, வறட்சியால் விவசாயம் பொய்த்து வேலையில்லாமல் இருந்த மக்களுக்கு பெருமளவில் வேலை வாய்ப்பை அளித்தனர்.

7 லட்சம் தொழிலாளர்கள்

தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட முழுநேர தீப்பெட்டி ஆலைகளும், 400 பகுதி நேர தீப்பெட்டி ஆலைகளும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் ஆலைகளும் உள்ளன. இந்த ஆலைகளை நம்பி 7 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.

இந்த ஆலைகள் பெரும்பாலும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆகிய ஊர்களிலேயே உள்ளன. இந்த மாவட்டங்களில் கடந்த 80 ஆண்டுகளாக லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு தீப்பெட்டித் தொழில் வாழ்வளித்து வருகிறது. அதில் 90 சதவீதம் பேர் பெண் தொழிலாளர்களாக உள்ளனர். இந்தியாவின் 90 சதவீத தீப்பெட்டித் தேவையையும், உலக நாடுகளின் 40 சதவீத தீப்பெட்டித் தேவையையும், தமிழகத் தீப்பெட்டி நிறுவனங்கள் தான் பூர்த்தி செய்து வருகின்றன.

தீப்பெட்டி தொழில்

தீப்பெட்டி தொழிலுக்கு அவ்வப்போது பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்கள் விலை நாளுக்குநாள் அதிகரித்து வந்தன. இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஒரு ரூபாயில் இருந்து 2 ரூபாயாக தீப்பெட்டி விலையை உயர்த்தினர். இது தீப்பெட்டி உற்பத்தியா ளர்களுக்கு ஓரளவு கைகொ டுத்தது. ஆனாலும் தீப்பெட்டி உற்பத்தியா ளர்களின் மகிழ்ச்சி நீண்டநாள் நீடிக்க வில்லை. அதற்குக் காரணம் சீன நாட்டின் லைட்டர்கள்.இவை சிகரெட் பாக்கெட்டுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் மிகக்குறைவாக ரூ. 5, ரூ. 7 ஆகிய விலைக்கு விற்பனை விற்பனை செய்யப்பட்டது. இதனால் தீப்பெட்டி தொழில் மிகவும் பாதித்து தீப்பெட்டி பண்டல்கள் தேக்கத்தால் உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு

சிறு, குறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் இதை நம்பி உள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதித்தது. இதைத்தொடர்ந்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தமிழக முதல்-அமைச்சருக்கு இதுபற்றி கோரிக்கை விடுத்தனர். அவர் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதன் பேரில் தற்போது ரூ. 20-க்கு குறைவான சிகரெட் லைட்டர்கள் இறக்குமதி செய்ய அரசு தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளன. இதுபற்றி தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

ஏற்கனவே பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களின் இறக்குமதியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந்தேதி பாராளுமன்றத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. குரல் எழுப்பினார். அதற்கு வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை மந்திரி அனுபிரியா படேல் பதிலளிக்கையில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை இறக்கு மதி செய்வதை உடனடியாகத் தடை செய்யக்கோரி தமிழக முதல்-அமைச்சரிடம் இருந்து 8.9.2022 தேதியிட்ட கடிதம் வந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

50 ஆண்டுகளாக....

இந்த சூழலில் ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கடந்த 21.4.2022-லேயே இதுபற்றி அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதற்கு முன்பு 1983-ல் சீனாவில் இருந்து தீப்பெட்டி இறக்குமதி செய்யப்பட்ட போது தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அனைவரும் வைகோவிடம் நேரடியாக சென்று முறையிட்டதன் காரணமாக அவர் கடும் முயற்சி எடுத்து சீனா பெட்டிகளுக்கு தடையை பெற்று தந்தார். அந்த தடை இன்று வரை தொடர்கிறது.

கடந்த 50 ஆண்டு காலமாக தீப்பெட்டி தொழிலுக்காக பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் வைகோ. அவருக்கும், தலைமை நிலைய செயலாளர் துரை வைகோவுக்கும், மத்திய மந்திரி மற்றும் தமிழக முதல்- அமைச்சருக்கும், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News