கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கொடைக்கானலில் தயாராகும் விதவிதமான கேக்குகள்
- டிசம்பர் மாதத்தில் இஸ்ரேல் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட கொடைக்கானலுக்கு வருகின்றனர்.
- உலர் பழங்கள், உயர்ந்த வகை ஒயின் கொண்டு இந்த கேக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
குறிப்பாக டிசம்பர் மாதத்தில் இஸ்ரேல் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட கொடைக்கானலுக்கு வருகின்றனர்.
இதனால் வட்டகானல் பகுதியில் போலீசார் பாதுகாப்பும் அதிகரிக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை அதனைத் தொடர்ந்து புத்தாண்டு பிறப்பு என ஒரு வார காலம் திருவிழாபோல் சுற்றுலா பயணிகள் கூட்டம் இருக்கும். அவர்களை மகிழ்விக்கும் விதமாக நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் பல்வேறு அலங்காரங்கள், ஸ்டார் மற்றும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகையில் முக்கிய இடம் பிடிப்பது கேக் ஆகும். கொடைக்கானலில் நவம்பர், டிசம்பர் மாதத்தில் மட்டும் பிரத்தியேக கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. உலர் பழங்கள், உயர்ந்த வகை ஒயின் கொண்டு இந்த கேக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன் சுவை சுற்றுலா பயணிகளை சுண்டி இழுப்பதால் விற்பனை களைகட்டி உள்ளது.பல்வேறு ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் தயாரிக்கப்படும் கேக்குகளை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.