மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் தடையை மீறி நிறுத்தப்பட்ட வாகனங்கள்
- நகராட்சி கமிஷனர் அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் சங்கிலயால் இணைத்து பூட்டினர்.
- பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மேட்டுப்பாளையம்,
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களின் மையப்பகுதியாகவும், தமிழகம், கேரளா, கர்நாடக மாநில எல்லைப்பகுதியாகவும் மேட்டுப்பாளையம் உள்ளது. இங்கு உள்ள பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், உள்ளூர் பகுதிகளுக்கும் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
எனவே தினமும் ஆயிரக்கணக்கானோர் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் வந்து வெளியூருக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
இந்தநிலையில் அந்த பஸ் நிலைய வளாகத்திற்குள் ஒருசிலர் வெளி வாகனங்களை நிறுத்தி சென்றனர். இதற்கு மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் தடை விதித்தது.
இருந்தபோதிலும் கோவை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வோரில் ஒரு சிலர், மேட்டுப்பாளையம் பஸ் நிலைய வளாகத்திற்குள் இருசக்கர வாகனத்தை காலையில் நிறுத்தி விட்டு, மாலையோ அல்லது இரவோ வந்து எடுத்து செல்கின்றனர். இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், மாணவ -மாணவிகள் நிற்க இடமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதாவிற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. எனவே அவர் அதிரடியாக பஸ் நிலையத்திற்கு வந்தார். அவருடன் பொறியாளர் சுகந்தி மற்றும் நகராட்சி ஊழியர்களும் வந்திருந்தனர். அப்போது மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் வாகனங்கள் தடையை மீறி நிறுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. எனவே அவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் சங்கிலயால் இணைத்து பூட்டு போட்டு பூட்டினார்.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் அமுதா கூறுகையில், பஸ் நிலைய வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களின் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் வாகனத்தை எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் ஒருசிலர் காலையில் வாகனத்தை நிறுத்தி விட்டு, மீண்டும் மாலையோ அல்லது இரவோ வந்து வாகனத்தை எடுத்துச் செல்கின்றனர்.
இதனால் பேருந்து பயணிகளுக்கும், மாணவர்களுக்கும் இடையூறு ஏற்பட்டு உள்ளது. நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை எச்ச ரித்தும் தடையை மீறி வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர்.எனவே பஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு உள்ள வாகனங்களுக்கு பூட்டு போட்டு உள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக வந்து உரிய அபராதம் செலுத்திய பின்னரே, வாகனங்கள் மீண்டும் ஒப்படைக்கப்படும். மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணிகள்தொடரும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.