கணவன் இறந்த துக்கத்தில் மனைவி சாவு
- ஒரே இடத்தில் அடக்கம்
- ஏராளமானோர் திரண்டு அஞ்சலி
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் கஸ்பா கவுதமபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கே.சேகர் (வயது 65), இவரது மனைவி அஞ்சலி (60) இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன் 2 மகள்கள் உள்ளனர்.
சேகரும், அஞ்சலியும் மிகவும் பிரியமுடன், பாசத்துடனும் மற்றவர்க ளுக்கு எடுத்துக்காட்டாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த சேகர் நேற்று முன்தினம் காலை திடீரென இறந்தார்.
இதனால் அவரது மனைவி அஞ்சலி அழுது புரண்டுள்ளார் பாசமான தனது கணவர் இறந்துவிட்டார் என அவரது சடலத்தின் அருகே உட்கார்ந்து நேற்று முன்தினத்திலிருந்து அழுதபடியே இருந்துள்ளார் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், குடும்பத்தினர் ஆறுதல் கூறியும் தொடர்ந்து அழுதபடியே இருந்தார்.
கணவர் உடல் அருகே இருந்த அஞ்சலி நேற்று மதியம் திடீரென மயங்கி விழுந்தார். அவரை குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அஞ்சலி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், உறவினர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து மலர் வைத்து அஞ்சலி செலுத்தி னார்கள். சேகர், அஞ்சலி இருவரின் உடல்களும் ஒரே பாடையில் வைத்து கஸ்பா சுடுகாட்டுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
ஒரே குழியில் இருவரது உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன.