ராஜூக்கள் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
- ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
- கடன் தருகிறேன் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளில் பேசி ஏமாறுகிறவர்களின் பணம் திருடப்படுவதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருத்தரங்கில் பேசினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி கலையரங்கத்தில் எம்.பி.ஏ. மாணவ-மாணவிகளுக்கான சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பேராசிரியை சுமதி தலைமை தாங்கினார். முதல்வர் வெங்கடேசுவரன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் (சைபர் கிரைம்) கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ஏமாறுவதில் படித்தவர்களே அதிகமாக உள்ளனர். இதற்காகவே காவல்துறையில் சைபர் கிரைம் என்ற என்ற ஒரு துறையே உள்ளது. முன்பின் தெரியாதவர்களின் அழைப்பு மற்றும் சம்பந்தம் இல்லாத லிங், பரிசு விழுந்துள்ளது, கடன் தருகிறேன் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளில் பேசி ஏமாறுகிறவர்களின் பணம் திருடப்படுகிறது. இதில் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். பாதிக்கப்படுபவர்கள் உடனே சைபர் கிரைம் மற்றும் அருகில் உள்ள காவல்நிலையங்களின் மெயில் ஐ.டி. தொலைபேசி எண் ஆகியவற்றில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் நிவாரணம் பெற முடியும்.
"காவல் உதவி" என்ற ஆப்சை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். அதில் 60 விதமான உதவிகள் உள்ளன. பெண்கள் பாதுகாப்புக்கு இது மிகவும் முக்கியமானதாகும். பெண்கள் தங்களது புகைப்படங்களை வலைதளத்தில் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றார். இதில 200- க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.