தாளவாடி அருகே காட்டு யானைகள் அட்டகாசம்: நஷ்ட ஈடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
- தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
- நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி அருகே ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட குருபரகுண்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதேகவுடா (வயது 49) என்பவர் 2 ஏக்கரில் ராகி பயிர் செய்துள்ளார். நேற்று இரவு தோட்டத்தில் புகுந்த 4-க்கும் மேற்பட்ட யானைகள் ராகி பயிரை சேதாரம் செய்துள்ளது.
காலையில் மாதேகவுடா தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது ராகி பயிர் சேதாரம் ஆனாதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யானையால் ஒரு ஏக்கர் ராகி பயிர் சேதாரம் ஆகியுள்ளது. சேதம் அடைந்த ராகி பயிர்களுக்கு வனத்துறையினர் உரிய நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், யானைகள் தோட்டத்தில் புகாதவாரு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
யானைகள் தொடர்ந்து ராகி தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கர்நாடக மாநிலத்திலிருந்து யானை கூட்டங்கள் இடம் பெயர்ந்து தாளவாடி மற்றும் வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றி வருகின்றன.
எனவே தாளவாடி வனப்பகுதி செல்லும் கிராம மக்கள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வலியுறுத்தி உள்ளனர்.