செங்கோட்டையில் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படுமா?
- நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செங்கோட்டை வழியாக கேரளா மாநிலத்திற்கு சென்று வருகின்றன.
- அண்மைக்காலமாக போக்குவரத்து நெரிசல் பள்ளி கல்லூரி நேரமான காலை மாலையில் அதிகரித்து காணப்படுகிறது.
செங்கோட்டை:
தமிழக கேரளா எல்லையில் மிக முக்கிய பகுதியாகவும் தொழில் மற்றும் வர்த்தகம் சார்ந்த விற்பனை தொழிலுக்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் மற்றும் அண்டை மாநில பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செங்கோட்டை வழியாக கேரளா மாநிலத்திற்கு சென்று வருகின்றன. இதன் காரணமாக அண்மைக்காலமாக போக்குவரத்து நெரிசல் பள்ளி கல்லூரி நேரமான காலை மாலையில் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக செங்கோட்டை மேலபஜார் மகாத்மா காந்தி சாலை, தாலுகா அலுவலகம் பகுதி, வாஞ்சிநாதன் சிலை பகுதி, பஸ் நிலையம், வனத்துறை சோதனை சாவடி போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் காய்கனி வாரச்சந்தை நாட்களில் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கரவாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தபடுவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. இதற்கு முக்கிய காரணம் இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ போன்றவற்றை ஓரமாக நிறுத்தாமல், போக்குவரத்து மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூராக கண்ட இடங்களில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன்கருதி போக்குவரத்துக்கு இடையூராக வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.